விவிஐபிகளுக்கான ஹெலிகாப்டர்கள் வாங்குவதில் முறைகேடு: லஞ்சம் பெற்ற இங்கிலாந்து இடைத்தரகர் தலைமறைவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
விவிஐபிகளுக்கான ஹெலிகாப்டர்கள் வாங்குவதில் முறைகேடு: லஞ்சம் பெற்ற இங்கிலாந்து இடைத்தரகர் தலைமறைவு

துபாய்: விவிஐபிகளுக்கான ஹெலிகாப்டர்கள் வாங்கும் ஒப்பந்தத்தை பெறுவதற்காக லஞ்சம் பெற்ற இங்கிலாந்தை சேர்ந்த இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் என்பவரை இந்தியாவுக்கு நாடு கடத்த துபாய் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.       
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக ஹெலிகாப்டர்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, இங்கிலாந்தை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ. 3,600 கோடியில், 12 ஹெலிகாப்டர்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.



இதற்கான ஒப்பந்தத்தை பெற அந்நிறுவனம் ரூ. 423 கோடி லஞ்சம் கொடுத்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு இந்திய அரசு, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

3 இடைத்தரகர்கள் லஞ்சம் பெற்றது விசாரணையில் தெரியவந்தது. இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் என்பவர் ரூ. 225 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில், கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் துபாயில் கைது செய்யப்பட்டார்.

விசாரணைக்காக அவரை ஒப்படைக்குமாறு துபாய் அரசை இந்தியா கேட்டுக்கொண்டது. இதுதொடர்பாக துபாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், கிறிஸ்டியன் மைக்கேலை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது. இந்நிலையில், கிறிஸ்டியன் மைக்கேல் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அவரை தேடும் பணியில் துபாய் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

.

மூலக்கதை