இலங்கையில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்...... யானையின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கூட்டமாக வந்த காட்டு யானைகள்

தினகரன்  தினகரன்
இலங்கையில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்...... யானையின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கூட்டமாக வந்த காட்டு யானைகள்

கொழும்பு: இலங்கையில் இறந்து போன காட்டுயானையின் உடலுக்கு ஏராளமான யானைகள் சுற்றிவந்து அஞ்சலி செலுத்தியது காண்போரை நெகிழச்செய்தது. இலங்கை அநுராதாபுரம் பகுதியில் உள்ள காலபோவா வனப்பகுதியில் உள்ள குட்டையில் நேற்று முன்தினம் தண்ணீர் குடிக்க யானை ஒன்று வந்தது. வயது முதிர்ச்சி மற்றும் உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக கரையில் மயங்கி விழுந்த அந்த யானை, சிறிது நேரத்தில் உயிரிழந்தது. இந்நிலையில் நேற்று அந்த இடத்திற்கு வந்த யானை கூட்டம் ஒன்று இறந்துகிடந்த யானையை தொட்டுத் தழுவின. பின்னர் அமைதியாக சிறுது நேரம் அங்கிருந்த யானைகள் களைந்து சென்றன. இதேபோல் மேலும் சில யானை கூட்டங்களும் அங்கு வந்து இறந்த யானைக்கு அஞ்சலி செலுத்தியது காண்போரை நெகிழச்செய்தது. மற்றோரு மிருகத்துடன் மோதியதால் தான் அந்த யானை இறந்ததாக கூறப்படுகிறது. இறந்த யானைக்கு அஞ்சலி செலுத்த சுமார் 300 வனவிலங்குகள் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. இதேபோல் நேற்று இலங்கையின் ஹபாரான என்ற இடத்திற்கு அருகே உள்ள வனப்பகுதியில் 3 யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்தன. தண்டவாளத்தை கடக்க முயன்ற தாய் யானை மற்றும் அதன் 2 குட்டி யானைகளை அவ்வழியாக வந்த சரக்கு ரயில் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தன. இத்தகைய விபத்துகளை தவிர்க்க 2 ஆயிரத்து 651 கிலோமீட்டர் தூரம் மின்கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இலங்கையில் சுமார் 7 ஆயிரத்து 500 யானைகள் இருக்கும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை