தைவான் நாட்டில் இயக்கப்பட்டு வரும் 106 ஆண்டுகள் பழமையான மலைரயில்

தினகரன்  தினகரன்
தைவான் நாட்டில் இயக்கப்பட்டு வரும் 106 ஆண்டுகள் பழமையான மலைரயில்

சியாய்: ஊட்டி மலை ரயிலுக்கு சவால் விடும் வகையில் தைவான் நாட்டிலும் 106 ஆண்டுகள் பழமை வாய்ந்த மலைரயில் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. மத்திய தைவானில் உள்ள அலிஷான் மலைப்பகுதியில் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பசுமையான வனப்பகுதிக்கு நடுவே கண்ணைக்கவரும் சிவப்பு நிறத்தில் இந்த ரயில் வளைந்துநெளிந்து செல்லும் அழகை காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். கடல் மட்டத்தில் இருந்து 30 மீட்டர் உயரத்தில் உள்ள சியாய் ரயில் நிலையத்தில் இருந்து 2 ஆயிரத்து 451 மீட்டர் உயரத்தில் உள்ள சூ சான் என்ற ரயில் நிலையம் நோக்கி பச்சை வனத்தின் நடுவே சிகப்பு புழு போன்று ஊர்ந்து செல்கிறது அலிஷான் மலைரயில். மலைப்பாதையில் சுமார் 71 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த ரயில் இயக்கப்படுகிறது. ஆசியாவிலேயே அதிகதூரம் மலைப்பாதையில் செல்லும் ரயில் என்ற சிறப்பும் இந்த அலிஷான் மலைரயிலுக்கு உண்டு. 100 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியத்தை இன்றளவும் கடைபிடித்து வருவதால்தான் மக்கள் இதில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இன்றைய காலகட்டத்தில் பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சிகள் வந்துள்ளன. இதனால் ரயில்வே துறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உட்கார்ந்த இடத்திலிருந்தே டிராக்கை மாற்றும் அளவுக்கு தொழில்நுட்பம் இருந்தாலும் அலிஷான் மலைரயில் பாதையில் டிராக்கை மாற்ற வேண்டும் என்றால் ரயில் ஓட்டுநரால் மட்டும் தான் முடியும். ஊட்டி மலைரயிலுக்கு சவால் விடும் வகையில் இந்த அலிஷான் மலைரயில் உள்ளது என்றால் அது மிகையாகாது.

மூலக்கதை