இலங்கையுடன் மகளிர் டி20 : 13 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

தினகரன்  தினகரன்
இலங்கையுடன் மகளிர் டி20 : 13 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

கதுநாயகே: இலங்கை மகளிர் அணியுடனான டி20 போட்டியில், இந்தியா 13 ரன் வித்தியாசத்தில் வென்றது.கதுநாயகே விளையாட்டு வளாக மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது. இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன் குவித்தது. டானியா பாட்டியா 46 ரன் (35 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) ஜெமிமா, அனுஜா தலா 36, வேதா கிருஷ்ணமூர்த்தி 21*, மித்தாலி ராஜ் 17 ரன் எடுத்தனர். கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர் டக் அவுட்டானார். அடுத்து 20 ஓவரில் 169 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 19.3 ஓவரில் 155 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கவுஷல்யா அதிகபட்சமாக 45 ரன், யசோதா மெண்டிஸ் 32, கேப்டன் ஜெயாங்கனி 27, கவிஷா திலாரி 11 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்திய பந்துவீச்சில் பூனம் யாதவ் 4 ஓவரில் 26 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். ராதா யாதவ், ஹர்மான்பிரீத் கவுர் தலா 2, அனுஜா, அருந்ததி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி கொழும்புவில் நாளை நடைபெறுகிறது. ஒரே ஓவரில் 3 சிக்சர் - ஜெமிமா சாதனைஇலங்கை அணியுடன் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில், இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகியூஸ் 15 பந்தில் 36 ரன் (3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். சர்வதேச கிரிக்கெட்டில், ஒரே ஓவரில் 3 சிக்சர் விளாசிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை ஜெமிமாவுக்கு கிடைத்துள்ளது.

மூலக்கதை