ஆங்கில ஊர் பெயர்களை மாற்ற முயற்சி

தினமலர்  தினமலர்
ஆங்கில ஊர் பெயர்களை மாற்ற முயற்சி

சென்னை : தமிழகத்தில், ஆங்கிலேயர் உச்சரிப்புடன் உள்ள ஊர் பெயர்களை மாற்றும் பணியில், தமிழ் வளர்ச்சித் துறை ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக, சென்னையில், 220 சாலைகளின் பெயர்கள் மாற்றப்பட உள்ளன.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், தமிழகத்தில் உள்ள பல ஊர்களின் பெயர்களை, தங்களின் வசதிக்கேற்ப, அவர்கள் மாற்றினர். இதனால், பராம்பரியமிக்க பெயர்கள் கூட, அர்த்தம் இழந்துள்ளன. எனவே, இதுபோன்ற பெயர்களை, தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ற மாற்றும் பணியில், தமிழ் வளர்ச்சித்துறை ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், திருவல்லிக்கேணி, தஞ்சாவூர், துாத்துக்குடி என்ற ஊர் பெயர்கள், டிரிப்ளிகேன், டேஞ்சூர், டூட்டிகோரின் என, ஆங்கிலேயரின் உச்சரிப்புக்கு ஏற்ப மாற்றப்பட்டன. அவற்றை தமிழில் உள்ளது போல, ஆங்கிலத்திலும் மாற்ற வேண்டியுள்ளது.

சென்னையில், 'ஹால்ஸ் ரோடு' என்பது, தமிழ்ச்சாலை என, மாற்றப்பட்டுள்ளது. இதைப்போல, முதல்கட்டமாக, சென்னையில் உள்ள, 220 சாலைகளின் பெயர்கள் மாற்றப்பட உள்ளன.

தமிழகம் முழுவதும், இத்திட்டத்தை செயல்படுத்த, அனைத்து மாவட்டங்களிலும், கலெக்டர் தலைமையில், ஆலோசனை குழு அமைக்கப்பட உள்ளது. தமிழறிஞர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ள இந்த குழுவினர், மாற்ற வேண்டிய பெயர்களின் பட்டியலை அளிப்பர்.

இதை, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தலைமையிலான, உயர்மட்ட குழு ஆய்வு செய்யும். பின், பெயர் மாற்றம் செய்து, புத்தகமாக வெளியிட்டு, அரசின் நிர்வாகத் துறைகளுக்கு வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூலக்கதை