நெம்மேலி திட்டத்தால் ஆலந்தூர் மக்களின்... தாகம் தீருமா?

தினமலர்  தினமலர்
நெம்மேலி திட்டத்தால் ஆலந்தூர் மக்களின்... தாகம் தீருமா?

பொதுப்பணித்துறை, சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் ஒருங்கிணைப்பு இல்லாததால், நெம்மேலி கடல்நீரை, குடிநீராக்கும் திட்டத்தில் இருந்து, ஆலந்துார் மண்டலத்திற்கு, 1 கோடி லிட்டர் குடிநீர் வழங்க, பிரதான குழாய் பதிக்கும் பணி, ஓராண்டாய் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தென்சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில், தினமும், 10 கோடி லிட்டர் குடிநீர் பெறும் வகையில், 900 கோடி ரூபாய் மதிப்பில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 2013ல் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் நீர், திருவான்மியூர், வேளச்சேரி, கேளம்பாக்கம், பள்ளிப்பட்டு, ஐ.டி., காரிடாரில் உள்ள பகுதிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.

அடுத்த கட்டமாக, இத்திட்டத்தின் விரிவாக்கமாக கூடுதலாக, 1 கோடி லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு செய்து, ஆலந்துார் மண்டலத்திற்கு வழங்க திட்டமிடப்பட்டது. இதற்காக, 27.90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.இத்திட்டத்திற்கு, 2016 பிப்ரவரியில் பூமி பூஜை போடப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தை, ஈரோட்டைச் சேர்ந்த பி அண்ட் சி., கன்ஸ்ட்ஷரக் ஷன் நிறுவனம் எடுத்தது. பணிகளை, 18 மாதங்களில் முடிக்க வேண்டும் என்பது ஒப்பந்த நிபந்தனை. பிரதான குழாய் பதிப்பதே, இத்திட்டத்தின் முக்கிய பணியாகும்.

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் பிரதான திட்டத்தில், கிழக்கு கடற்கரை சாலை, சோழிங்கநல்லுார், மேடவாக்கம், பள்ளிக்கரணை வழியாக, வேளச்சேரிக்கு பிரதான குடிநீர் குழாய் செல்கிறது. ஆலந்துாருக்கான குடிநீர் விரிவாக்க திட்டத்தின் படி, மேடவாக்கம் சந்திப்பில் இருந்து, இணைப்பு கொடுத்து, கூட்டு ரோடு, மவுன்ட் - -மேடவாக்கம் பிரதான சாலை வழியாக, உள்ளகரம் வரையும், அங்கிருந்து நங்கநல்லுார், ஆதம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கும் குழாய் சென்றடையும்.

பின், அந்தந்த பகுதியில் உள்ள கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குடிநீர் சேகரிக்கப்பட்டு, சுற்று வட்டார பகுதிகளுக்கு வினியோகிக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின் படி, நெம்மேலி தொழிற்சாலையில் கூடுதலாக, 1 கோடி லிட்டர் கடல்நீரை, குடிநீராக சுத்திகரிப்பு செய்யும் பணிகள், 90 சதவீதம் முடிந்துவிட்டன.மேடவாக்கம் சந்திப்பில் இருந்து, கீழ்கட்டளை, ஈச்சங்காடு சந்திப்பு வரை, குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுவிட்டன.

அதேபோல, கீழ்கட்டளையில் இருந்து நங்க நல்லுார், ஆதம்பாக்கம் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் வரை, குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு விட்டன. இப்பணிகள் முடிந்து, ஓராண்டிற்கு மேல் ஆகிறது. ஈச்சங்காடு சந்திப்பில், 200 மீட்டர் துாரத்திற்கு மட்டும், பிரதான குடிநீர் குழாய் இணைப்பு செய்தால், ஆலந்துார் மக்களின் குடிநீர் தேவை, முழு அளவில் பூர்த்தி செய்து விடலாம்.
ஆனால், கடந்த ஓராண்டாக, குழாய் இணைப்பு செய்யப்படாமல், திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கு, பொதுப்பணித்துறை அனுமதி வழங்காததும், அனுமதி பெறுவதற்கான முயற்சியை, குடிநீர் வாரியம் செய்யாததுமே காரணம். கீழ்கட்டளை ஏரியில் இருந்து, நாராயணபுரம் ஏரிக்கு செல்லும் போக்கு கால்வாயை, குடிநீர் திட்ட பிரதான குழாய்கள் கடக்க வேண்டும்.

மவுன்ட்- - மேடவாக்கம் சாலையில், போக்கு கால்வாய் குறுக்கே, சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதை ஒட்டி, குடிநீர் திட்ட குழாய் கொண்டு சென்றால், ஏரியின் உபரிநீர் செல்வதில் பாதிப்பு ஏற்படும் எனக்கூறி, பொதுப்பணித்துறை அனுமதி வழங்க மறுக்கிறது. அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்யாமல், தொழில்நுட்ப ஆலோசனைகளையும் பெறாமல், முக்கியமான குடிநீர் திட்ட பணியை, அதிகாரிகள் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். உரிய அனுமதி கிடைத்து, பணிகளை விரைந்து முடித்தால் தான், ஆலந்துார் மண்டல மக்களின் தாகம் தீரும்.

எங்கள் தரப்பில் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது. குறிப்பிட்ட, 200 மீட்டர் துாரம், குழாய் இணைப்பு செய்தால், ஆலந்துாருக்கு குடிநீர் வினியோகம் உடனடியாக துவங்கும். பொதுப்பணித்துறை அனுமதிக்காகவே காத்திருக்கிறோம்.
-குடிநீர் வாரிய பொறியாளர்

நெம்மேலி குடிநீர் குழாய் பதிக்கும் திட்டத்தில், பிரச்னைக்குரிய பகுதியில், பில்லர் அமைத்து, மேல்நிலையில், குழாயை கொண்டு செல்ல பரிந்துரைத்து, சில மாதங்களுக்கு முன், கீழ்மட்ட அளவில் ஒப்புதல் வழங்கி உள்ளோம். எங்கள் தலைமை பொறியாளர் கூர்ந்தாய்வு செய்து, குழாய் இணைப்பு செய்ய, அனுமதி வழங்க வேண்டும். விரைவில் அனுமதி கிடைக்கும்.
-பொதுப்பணி துறை பொறியாளர்

- -நமது நிருபர்- -

மூலக்கதை