தேர்தலில் சத்ருகன் சின்ஹாவுக்கு 'சீட்' கிடையாது

தினமலர்  தினமலர்
தேர்தலில் சத்ருகன் சின்ஹாவுக்கு சீட் கிடையாது

கட்சியின் அதிருப்தி, எம்.பி.,யாக வலம் வரும், நடிகர் சத்ருகன் சின்ஹாவுக்கு, அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், 'சீட்' மறுக்கப்பட்டு, அவருக்குப்பதிலாக, பீஹார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியை களமிறக்க, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது.

நரேந்திர மோடி பிரதமராகவும், அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவராகவும்பதவியேற்ற பின், கட்சியின் மூத்த தலைவர் அத்வானி மட்டுமல்லாமல், பாலிவுட் முன்னாள் நடிகர் சத்ருகன் சின்ஹா, முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் போன்றவர்களும் முக்கியத்துவம் இழந்தனர். மத்திய அரசில் அமைச்சர் பதவி வழங்கப்படாததால், அதிருப்தியாளர்களாக மாறிவிட்டனர் என்ற பேச்சு, கட்சிக்குள் உலா வரத்துவங்கினாலும், இவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கைகளும் பாயவில்லை.

மத்திய அரசு குறித்தும், பிரதமர் மோடி குறித்தும், பகிரங்கமான விமர்சனங்களை வைத்ததுடன், எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் கைகோர்த்து, பல நிகழ்ச்சிகளிலும், போராட்டங்களிலும், சத்ருகன் சின்ஹாபங்கெடுத்து வருகிறார்.

அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து, தேர்தல் பணிகள் குறித்து, பா.ஜ., மேலிட தலைவர்கள், டில்லியில் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில், சத்ருகன் சின்ஹா விவகாரம் பேசப்பட்டதாக தெரிகிறது. அதன்படி, அடுத்த தேர்தலில், சத்ருகன்சின்ஹாவுக்கு, 'சீட்' மறுக்கப்படும் என தெரிகிறது. அவருக்கு பதிலாக, பீஹார் மாநில துணை முதல்வரும், செல்வாக்கு மிகுந்த தலைவருமான, சுஷில் குமார் மோடியை, பாட்னா சாஹேப் தொகுதியில், பா.ஜ.,வேட்பாளராக நிறுத்த, பிரதமரும், அமித் ஷாவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- நமது டில்லி நிருபர் -

மூலக்கதை