பலியான துப்புரவுத்தொழிலாளி கதறிய மகன் ஒரு புகைப்படம் ஓடி உருகி உதவிய நெட்டிசன்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பலியான துப்புரவுத்தொழிலாளி கதறிய மகன் ஒரு புகைப்படம் ஓடி உருகி உதவிய நெட்டிசன்கள்

புதுடெல்லி: டெல்லியைச் சேர்ந்தவர் அணில். துப்புரவுத் தொழிலாளியான இவர் அவரின் மனைவி ராணியுடன்  டெல்லியிலுள்ள டபரி பகுதியில்தான் வசித்து வந்தார்.

இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 3 வது  குழந்தை பிறந்து வெறும் நான்கு மாதங்கள் மட்டுமே ஆகிறது.

மிகவும் வறுமை நிலையில் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில்  கடந்த வெள்ளிக்கிழமை மேற்கு டெல்லியின் டபரி நகர் அருகே ஒரு குடியிருப்பில் வசிக்கும் சட்பீர் கலா என்பவரின் வீட்டில் சாக்கடையில் துப்பரவு செய்யும் பணியைச் செய்துகொண்டிருந்தார்.

துப்புரவு பணியில் இறங்கும்போது பாதுகாப்பு உபகரணங்களைக் கொடுக்காமல் வெறும் கயிற்றை மட்டுமே அணிலுக்கு கொடுத்துள்ளார் சட்பீர் கலா. இதனால் கயிற்றை மட்டுமே கட்டிக்கொண்டு சாக்கடை தொட்டியில் இறங்கியுள்ளார்.

ஆனால், இறங்கும்போதே கயிறு அறுந்துவிழுந்ததால் சாக்கடைதொட்டியில் விழுந்த அணில் உள்ளே சிக்கிக் கொண்டார்.

இரவு நேரம் என்பதால் அணிலை  மீட்க முடியவில்லை. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அணில் பரிதாபமாக உயிரிழந்தார்.   இந்த சம்பவத்தை  அடுத்து அணிலின்  உயிரிழப்புக்குக் காரணமான சட்பீர் கலாவை போலீசார்  வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். அணிலின் உடல் மருத்துவமனையில்  உடல் உடற்கூராய்வு  செய்யப்பட்டு  மருத்துவ மனையில் இருந்த போது  அவரது 8 வயது மகன் அணிலின் முகத்தை  தடவி, அப்பா அப்பா என கதறி  அழுதது பார்ப்போரை பதறவைத்தது.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த யாரோ ஒருவர் நடந்த சம்பவத்தை விளக்கி  ராணிக்கு உதவுமாறு ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

இதைப் பார்த்த ட்விட்டர்வாசிகள் ராணிக்கு உதவ முன்வந்தனர்.

அதன் பிறகு ராணியின் வங்கிக் கணக்கை  கூறியதும் அவரது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பி உதவி செய்துள்ளனர். 3 குழந்தைகளை  வைத்துக் கொண்டு அடுத்தாக என்ன செய்வது என தெரியாமல் சோகத்தில் உறைந்து போயிருந்த ராணிக்கு நெட்டிசன்கள்  உதவியதால் இதுவரை சுமார் 24 லட்சம் வரை நன்கொடையாக வந்துள்ளது.

நெகிழ்ந்துபோன ராணி பணம் அனுப்பியவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.

பார்ப்போரை உருக வைத்த இந்த சம்பவம் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது.

.

மூலக்கதை