சர்வதேச ஒருநாள் போட்டியில் 14வது சதம் அடித்து டிவில்லியர்ஸ் சாதனையை முறியடித்த ஷிகர் தவான்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சர்வதேச ஒருநாள் போட்டியில் 14வது சதம் அடித்து டிவில்லியர்ஸ் சாதனையை முறியடித்த ஷிகர் தவான்

துபாய்: ஹாங்காங் அணியுடனான நேற்றைய போட்டியில் சதம் அடித்த இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் புதிய மைல்கல்  ஒன்றை எட்டியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் மிக குறைந்த போட்டிகளில் தனது 14வது சதத்தை பதிவு செய்த வீரர்கள் பட்டியலில் தென் ஆப்ரிக்கா அணியின் முன்னாள் ஜாம்பவான் டிவில்லியர்ஸை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஹாங்காங்கை எதிர்கொண்டது.

இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்தது.

கிஞ்சித் ஷா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து ஆடிய ஹாங்காங் அணி முதல் விக்கெட்டுக்கு 174 ரன்கள் சேர்த்தது.

நிஜகத் கான் 92 ரன்களும், அன்சுமான் ரத் 73 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் ரன் எடுக்க திணறியதால் 50 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதையடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

நேற்றைய ஆட்டத்தில் ஷிகர் தவான் 127 ரன்கள் எடுத்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் மிக குறைந்த போட்டிகளில் தனது 14வது சதத்தை பதிவு செய்த வீரர்கள் பட்டியலில் தென் ஆப்ரிக்கா அணியின் முன்னாள் ஜாம்பவான் டிவில்லியர்ஸை பின்னுக்கு தள்ளியுள்ளார். தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஏ. பி டிவில்லியர்ஸ் 131 போட்டிகளில் 14 சதங்கள் அடித்திருப்பதன் மூலம் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

டிவில்லியர்ஸ்  131 போட்டிகள் ஆடி சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.  

.

மூலக்கதை