கத்துக்குட்டி ஹாங்காங் அணியை வெல்ல இவ்வளவு போராட்டமா?: இந்திய அணியை டிவிட்டரில் வறுத்து எடுத்த ரசிகர்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கத்துக்குட்டி ஹாங்காங் அணியை வெல்ல இவ்வளவு போராட்டமா?: இந்திய அணியை டிவிட்டரில் வறுத்து எடுத்த ரசிகர்கள்

துபாய்: ஹாங்காங் அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை கிரிக்கெட் லீக்  ஆட்டத்தில் 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு கத்துக்குட்டி அணியிடம் இவ்வளவு போராட்டமா என இந்திய அணி வீரர்களை ரசிகர்கள்  கலாய்த்து தள்ளியுள்ளனர்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4வது லீக் ஆட்டத்தில் ஏ-பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹாங்காங் கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 23 ரன்கள் எடுத்தார். அம்பதி ராயுடு 60 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஷிகர் தவான் நிலைத்து நின்று சதம் அடித்து 127 ரன்களில் வெளியேற, தினேஷ் கார்த்திக் 33 ரன்களும், கேதார் ஜாதவ் 28 ரன்களும் சேர்த்தனர்.



36. 2 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது இந்தியா. இதனிடையே, 40. 4-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார் தவான்.

120 பந்துகளை சந்தித்த அவர் 15 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 127 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து வந்த தோனி மூன்றே பந்துகளை சந்தித்து டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் 33, புவனேஷ்வர் குமார் 9 ரன்களில் விழ, ஷர்துல் தாக்குர் டக் அவுட்டானார். 50 ஓவர்கள் முடிவில் கேதார் ஜாதவ் 28, குல்தீப் யாதவ் ரன்களின்றி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்தது. கிஞ்சித் ஷா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஹாங்காங் தரப்பில் கிஞ்சித் ஷா 3, எஸான் கான் 2, எஸான் நவாஸ், ஐஸாஸ் கான் தலா ஒரு விக்கெட் எடுத்திருந்தனர்.

286 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய ஹாங்காங் அணி தொடக்க வீரர் நிஸாகத் கான் 92 ரன்கள் அடித்தார். உடன் வந்த கேப்டன் அன்ஷுமன் ராத் 73 ரன்கள் விளாசினார்.

எஞ்சிய 6 விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் வீழ்ந்தன. மற்ற வீரர்கள் ரன் எடுக்க திணறியதால் 50 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதையடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் சிறிய அணியான ஹாங்காங் அணியிடம் வெற்றி பெறவே இந்த போராட்டம் என்றால் இன்று பாகிஸ்தான் அணியிடம் என்ன செய்வார்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.


.

மூலக்கதை