இந்திய அணிக்கு எளிய இலக்கு: 162 ரன்களில் சுருண்டது பாக்.,

தினமலர்  தினமலர்
இந்திய அணிக்கு எளிய இலக்கு: 162 ரன்களில் சுருண்டது பாக்.,

துபாய்: ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்திய பவுலர்கள் அசத்தினர். இதற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் அணி 162 ரன்களுக்கு சுருண்டது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று துபாயில் நடக்கும் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் கலீல் அகமது, ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு பும்ரா, பாண்ட்யா சேர்க்கப்பட்டனர்.

புவனேஷ்வர் அசத்தல்


பாகிஸ்தான் அணிக்கு இமாம் உல் ஹக், பகர் ஜமான் ஜோடி மோசமான துவக்கம் தந்தது. புவனேஷ்வரின் மூன்றாவது ஓவரில் இமாம் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். மீண்டும் வந்த புவனேஷ்வர் இம்முறை பகர் ஜமானை டக் அவுட்டாக்கினார். பின், இணைந்த பாபர் ஆசாம், சோயப் மாலிக் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. சகால் பந்தை ஆசாம் பவுண்டரிக்கு விரட்டினார். குல்தீப் பந்தை மாலிக் சிக்சருக்கு பறக்கவிட்டார்.

கைகொடுத்த குல்தீப்


இவர்களை பிரிக்க குல்தீப் கைகொடுத்தார். இவரது 'சுழலில்' மூன்றாவது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தபோது, ஆசாம் (47) சிக்கினார். ஜாதவ் பந்தில் கேப்டன் சர்பராஸ் (6) சரணடைந்தார். தொல்லை தந்த மாலிக் (43) ரன் அவுட்டானார். ஆசிப் அலி (9), ஷாதப் கானை (8) வெளியேற்றி இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தார் ஜாதவ். பும்ரா 'வேகத்தில்' பகிம் ஆஸ்ரப் (21) சரிந்தார். புவனேஷ்வர் 'வேகத்தில்' ஹசன் அலி (1) திரும்பினார். உஸ்மான் போல்டாக, பாகிஸ்தான் அணி 43.1 ஓவரில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர், ஜாதவ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

மூலக்கதை