நிலக்கரி இறங்கு தளத்தை எதிர்த்து கடலில் முற்றுகை போராட்டம்: 1030 மீனவர்கள் மீது வழக்கு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நிலக்கரி இறங்கு தளத்தை எதிர்த்து கடலில் முற்றுகை போராட்டம்: 1030 மீனவர்கள் மீது வழக்கு

உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி கல்லாமொழி அருகே 660 மெகாவாட் திறனுடன் இரு அலகுகள் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கென கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சமன் செய்யும் பணி நிறைவடைந்த நிலையில், இந்த பணிக்குரிய பொருட்கள் ராட்சத லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி கொண்டு வருவதற்காக கல்லாமொழி கடலில் சுமார் 8 கி. மீ தொலைவிற்கு பாலம் அமைத்து நிலக்கரி இறங்குதளம் அமைக்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது.

கன்வேயர் மூலம் நிலக்கரி கொண்டு வர ராட்சத தூண்கள் அமைப்பதற்காக கடலில் போர்வெல் அமைக்கும் பணி நடக்கிறது.

இப்பணிகளால் தங்களது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் எனக்கூறி குலசேகரன்பட்டினம், மணப்பாடு, ஆலந்தலை, கல்லாமொழி, பெரியதாழை, கொம்புத்துறை, சிங்கித்துறை, புன்னக்காயல், அமலிநகர், திரேஸ்புரம், இனிகோநகர் உள்ளிட்ட 26 மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் 256 நாட்டுப்படகுகளில் கருப்புக்கொடி கட்டி நிலக்கரி இறங்குதளம் பணி நடைபெறும் பகுதியை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து உடன்குடி கிராம நிர்வாக அதிகாரி வைரமுத்து, கூடங்குளம் கடலோர காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதன்பேரில், சட்டவிரோதமாக கூடியதாகவும், கருப்புக்கொடி ஏற்றியதாகவும் கூறி 1030 மீனவர்கள், 256 நாட்டுப்படகுகள் மீது கடலோர காவல்நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


.

மூலக்கதை