கிராமசபை கூட்டங்களில் பங்கேற்று முறைகேடுகளை அம்பலப்படுத்துங்கள்: கட்சியினருக்கு கமல் உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கிராமசபை கூட்டங்களில் பங்கேற்று முறைகேடுகளை அம்பலப்படுத்துங்கள்: கட்சியினருக்கு கமல் உத்தரவு

பெரம்பலூர்: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 2 நாள் மாநில நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் கோவையில் நேற்று துவங்கியது. நேற்று நடந்த கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவது பற்றியும், கிராமசபை கூட்டங்களில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் கமல் உத்தரவுப்படி முன்னணி நிர்வாகிகள் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு விளக்கினர்.

இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் முத்துக்குமார் கூறுகையில், ‘‘வரும் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. இந்த கிராமசபை கூட்டங்களில் அனைத்து இடங்களிலும் மக்கள் நீதிமய்ய நிர்வாகிகள், ெதாண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

அப்போது ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் வைக்கப்படும் வரவு, செலவு கணக்கை சரிபார்க்க வேண்டும். குறிப்பாக கொசு மருந்து அடித்ததாக லட்சக்கணக்கில் செலவு கணக்கு எழுதி இருப்பார்கள்.

 ஆனால் கொசு மருந்தே அடித்திருக்க மாட்டார்கள்.

இந்த மாதிரி முறைகேடுகளை கண்டறிந்து மக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் இந்த முறைகேடுகள் குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையம், அதிகாரிகள் ஆகியோரிடம் புகார் மனு அளிக்க வேண்டும். இந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், ஒரு மாதம் கழித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்.

இதற்கு ஏதேனும் ஆலோசனை தேவைப்பட்டால், கட்சியின் வழக்கறிஞர்களை தொடர்பு கொண்டு பெறலாம். இதற்கு வழக்கறிஞர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

கமல்ஹாசன் பேட்டி: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்,  சென்னையில் இருந்து இன்று காலை 10 மணிக்கு கோவை புறப்பட்டு சென்றார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மக்கள் நீதி மய்யம், பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.

அரசியலை  பொருத்தவரையில், விமர்சனங்கள் சகஜமானது, சாதாரணமானது. யாருக்கும் யாரையும்  விமர்சனம் செய்ய உரிமை உண்டு.

ஆனால், விமர்சனம் செய்பவர்களை  தாக்குதல் என்பது அரசியல் நாகரீகம் இல்லாதது. அதேபோல்தான் பெட்ரோல், டீசல்  விலை உயர்வை பற்றி கேட்ட ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்  நடத்தியிருக்கின்றனர்.

இது அரசியல் மாண்பு அல்ல. அரசியலில் இதுபோன்ற  சம்பவங்கள் நடக்க கூடாது.

விமர்சனம் செய்வதற்கு தகுந்த பதிலளிக்க வேண்டுமே  தவிர, தாக்குதலையே பதிலாக கொடுக்க கூடாது. மக்கள் கேள்வி கேட்பார்கள்.   அதற்கு பதில் சொல்ல வேண்டும்.

இந்த மாண்மைதான், மறைந்த தலைவர்கள் காந்தி,  பெரியார், அண்ணா நமக்கு சொல்லி தந்திருக்கிறார்கள். அவர்களிடம் மக்கள்  கேட்ட கேள்விகளுக்கும் தகுந்த பதிலை அளித்திருக்கிறார்கள்.

இதேபோல்  தாக்குதல் நடத்தவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை