இபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இபிஎஸ்ஓபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க முடிவு

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் மற்றும் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளனர்.

அதிமுகவில் ஓபிஎஸ் இணைந்த பின்பு அவரது ஆதரவாளர்கள் பலருக்கு கட்சியில் பொறுப்பு இல்லாமல் இருந்தது. அவர்களுக்கு பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.

அதேபோன்று எடப்பாடி ஆதரவாளர்களும் பதவி கேட்டு கோரிக்கை வைத்தனர். இந்த சூழ்நிலையில், கடந்த வாரம் பல்வேறு முன்னணி தலைவர்களுக்கு, புதிய பொறுப்புகளை கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமியும் அறிவித்தனர்.

 இதற்கிடையே, எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஓராண்டாக ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தி வந்தனர்.

இதுவரை 30 மாவட்டங்களில் நடந்து முடிந்துள்ளது. வரும் 22ம்தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறுகிறது.

அதை தொடர்ந்து வரும் 30ம்தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா சென்னையில் நடைபெறகிறது. இதை பிரமாண்டமாக  கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓபிஎஸ்சும் தலைமை வகிக்கின்றனர்.

 இதில், அதிமுகவின் 50 மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர்.

அப்போது, வரும் 30ம்தேதி சென்னையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். அதற்காக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கட்சி தொண்டர்களை அழைத்து வருவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

மேலும் அதிமுக கட்சியை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 7 உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் அவர்கள் நியமிக்கப்படவில்லை. அதுகுறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

மேலும் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது ஏற்கனவே உள்ள தொண்டர்களை புதுப்பிப்பது உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரச்னைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்க  திட்டமிட்டுள்ளனர்.

.

மூலக்கதை