மதுராந்தகத்தில் கிளியாற்றினால் மூழ்கப் போகும் கிராமங்கள்: சீரமைக்க வலியுறுத்தல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மதுராந்தகத்தில் கிளியாற்றினால் மூழ்கப் போகும் கிராமங்கள்: சீரமைக்க வலியுறுத்தல்

மதுராந்தகம்: மதுராந்தகம் பகுதிகளில் பருவமழை துவங்கும் நிலையில், கிளியாற்றினால் சுற்றுவட்டார கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் நிலவி வருகிறது. இந்த ஆற்றை உடனடியாக சீரமைக்க கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 2,400 ஏக்கர் பரப்பளவில் மதுராந்தகம் ஏரி உள்ளது. இந்த ஏரி நீர் மூலம் சுமார் 20 கிராம விவசாயிகள் பாசன வசதி பெற்று வருகின்றனர்.

பருவ மழைக்காலங்களின்போது, இந்த ஏரி நிரம்பி முழு கொள்ளளவை அடையும்போது, அதன் உபரி நீர் கிளியாற்றின் வழியாக பாலாற்றுக்கு திறந்து விடப்படுகிறது. இந்நிலையில், தூர்வாரி சீரமைக்கப்படாத கிளியாற்றில் தண்ணீர் செல்லும்போது, அதை ஒட்டியுள்ள முல்லியல், முன்னூத்திகுப்பம், கேகே. புதூர் ஆகிய கிராமங்களில் வெள்ளம் புகுந்துவிடுகிறது.

 அச்சமயங்களில் அதிகாரிகள் விரைந்து செயல்படுவது போல், கிராம மக்களை மீட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கின்றனர்.

ஆனால், கடந்த பல ஆண்டுகளாக கிளியாற்றை தூர்வாரி சீரமைப்பது, முறையாக பாதுகாப்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், தற்போது பருவ மழை துவங்கும் நிலையில், இந்த ஆண்டும் கிளியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், அதை சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயநிலை நீடித்து வருகிறது.

எனவே, கிளியாற்றின் கரைகளை வலுப்படுத்தி, ஆற்றை தூர்வாரி சீரமைக்க சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

.

மூலக்கதை