பல்லாவரம் சங்கர் நகரில் காவல் நிலையத்தில் பூங்கா: பொதுமக்கள் ஆர்வம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பல்லாவரம் சங்கர் நகரில் காவல் நிலையத்தில் பூங்கா: பொதுமக்கள் ஆர்வம்

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த சங்கர் நகரில் புதிதாக திறக்கப்பட்ட காவல் நிலைய வளாகத்தில் பூங்கா அமைத்து அழகுபடுத்தும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. பல்லாவரம் அடுத்த பம்மல், சங்கர் நகரில் பல கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய காவல் நிலையத்தை கடந்த ஜூன் 4-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதையடுத்து, அக்காவல் நிலையத்தில் பூங்கா உள்ளிட்ட பல்வேறு அழகுபடுத்தும் பணிகளில் அரசின் நிதியை எதிர்பாராமல், அப்பகுதியை சேர்ந்த தன்னார்வலர்களும் பொதுமக்களும் தாங்களாகவே முன்வந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆரம்ப காலத்தில் ஒரு சிறிய வாடகை கட்டிடத்தில் சங்கர் நகர் காவல் நிலையம் இயங்கி வந்தது.

இதனால் அங்கு கைதிகளை அடைத்து வைப்பதிலும், பறிமுதல் வாகனங்களை நிறுத்தி வைப்பதிலும் போலீசார் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.

குடியிருப்புகளுக்கு இடையே காவல் நிலையம் இயங்கி வந்ததால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இக்காவல்நிலையத்துக்கு சொந்த கட்டிடம் வேண்டும் என பொதுமக்கள், காவல்துறையினர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு பழைய காவல் நிலையத்தின் பின்புறம் அரசுக்குச் சொந்தமான சுமார் 75 சென்ட் இடத்தில் ரூ. 1. 32 கோடி மதிப்பீட்டில் புதிய காவல் நிலையம் கட்டி முடிக்கப்பட்டது.
  இதையடுத்து கடந்த ஜூன் மாதம் காவல் நிலையத்தை முதல்வர் திறந்து வைத்ததும், அவ்வளாகத்தை சுற்றிலும் பூங்கா மற்றும் பல்வேறு பொருட்களால் அழகுபடுத்தும் பணிகளில் தன்னார்வலர்களும் பொதுமக்களும் தாங்களாகவே முன்வந்து ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் புதிதாக திறந்துள்ள காவல் நிலையத்துக்கு பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக வருபவர்கள் இளைப்பாறுவதற்காக, நாங்கள் மரங்கள், புல்தரைகள், இருக்கைகள் மற்றும் சுத்தமான குடிநீர் ஆகியவற்றை நாங்களாகவே முன்வந்து நிர்மாணித்து வருகிறோம்.

இதனால் அனைத்து மக்களும் காவலர்களும் பயன்பெறுவர்’ என பெருமையுடன் கூறுகின்றனர்.

.

மூலக்கதை