மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது: அக்.3ம் தேதிக்குள் சுற்றறிக்கை வெளியிட ஐகோர்ட் உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது: அக்.3ம் தேதிக்குள் சுற்றறிக்கை வெளியிட ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வகை செய்யும் சுற்றறிக்கையை அக்டோபர் 3ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணல் கடத்தல் தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக விசாரணையில் உள்ளன.

இந்த வழக்குகள் கடந்த மே 8ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மணல் கடத்தலை தடுக்கவும், அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வகை செய்யும் சுற்றறிக்கையை தயாரிக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

வழக்கு நேற்று நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், ராமதிலகம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமைக் குற்றவியல் வக்கீல் எமிலியாஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அவரிடம், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதா என்று கேட்டனர்.
அதற்கு அரசு வக்கீல், சுற்றறிக்கை தொடர்பாக முடிவு செய்யப்பட்டு இறுதி வடிவம் தரப்பட்டுள்ளது. முதல்வரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.

சுற்றறிக்கையை அறிவித்து அமல்படுத்த ஒரு மாதம் கால அவகாசம் வேண்டும் என்றார். இதை கேட்ட நீதிபதி எஸ். எம். சுப்பிரமணியம், கடத்தல் பெரிய குற்றம்.

அதற்கு உடந்தையாக இருப்பது அதைவிட பெரிய குற்றம். நாங்கள் விழுப்புரத்திலிருந்து திருச்சி வழியாக செல்லும்போது ஏராளமான லாரிகள் மணல் கடத்தலில் ஈடுபட்டதைப் பார்த்திருக்கிறோம்.



பெரும்பாலான விபத்துக்கள் இந்த லாரிகளால்தான் நடைபெறுகின்றன. மணல் கடத்தலை தடுக்க முயலும் நேர்மையான அதிகாரிகளை லாரிகளால் மோதி கொலை செய்யும் செயல்களும் நடைபெறுகிறது.

இதை இந்த நீதிமன்றம் பொறுத்துக்கொண்டிருக்காது. மணல் கடத்தலை ஏன் அரசு அதிகாரிகள் தடுப்பதில்லை.

சட்டத்தை கொண்டுவர இந்த நீதிமன்றம் பல முறை அறிவுறுத்தியும் அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் உள்துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் பிறப்பிக்க நேரிடும்.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மணல் கடத்தலில் ஈடுபடும் கடத்தல்காரர்களுக்கு உதவி செய்யும் அதிகாரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கும் சுற்றறிக்கையை வரும் அக்டோபர் 3ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்.

இல்லையென்றால் நீதிமன்றம் இந்த விஷயத்தில் தலையிட நேரிடும் என்று கடுமையாக எச்சரித்து வழக்கை அக்டோபர் 3ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

.

மூலக்கதை