புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை எதிரொலி: பாளை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை எதிரொலி: பாளை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை

நெல்லை: புழல் சிறையில் கைதிகளின் சொகுசு வாழ்க்கை எதிரொலி காரணமாக பாளை மத்திய சிறையில் இன்று அதிகாலையில் 60 போலீசார் அதிரடியாக சென்று ஆய்வு நடத்தினர். தமிழக சிறைகளில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக கடந்த சில ஆண்டுகளாகவே குற்றச்சாட்டுகள் உள்ளன.

சிறைகளில் போலீசார் சோதனை நடத்தும்போதெல்லாம் தடை செய்யப்பட்ட பொருட்களான சிம்கார்டு, செல்போன், கஞ்சா, சிகரெட், மதுபானங்கள் அடிக்கடி சிக்குவதுண்டு. இந்நிலையில் சிறையில் சொகுசு வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இருப்பது புழல் சிறைவாசிகள் மூலம் தெரியவந்தது.

சென்னை புழல் சிறையில் எல்இடி டிவிக்கள், செல்போன்கள், கட்டில், மெத்தை உள்ளிட்ட பொருட்கள் சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.

அங்குள்ள கைதிகள் சிலர் அதிகாரிகள் உதவியுடன் நட்சத்திர ஓட்டலில் உள்ளது போல சொகுசு வாழ்க்கை அனுபவித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்த படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஜெயில்களில் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மத்திய சிறையில் இவ்வார தொடக்கத்தில் சோதனை நடத்தப்பட்டது. கைதிகளின் சொகுசு வாழ்க்கை தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் 8 பேர் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டனர்.

 இதன் தொடர்ச்சியாக புழல் சிறையில் இருந்து நேற்று தலைமை காவலர் 9 பேர் பணியிட மாற்றத்திற்கு உள்ளாயினர்.

கடுங்காவல் தண்டனையில் உள்ள சிறைகைதிகளும் தற்போது ஒரு சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் முக்கிய சிறைகளில் ஒன்றான பாளை மத்திய சிறையில் இன்று அதிகாலையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. பாளை போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தில்லை நாகராஜன், பர்ணபாஸ், காளியப்பன், பால்ராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் 60 போலீசாரோடு சென்று மொத்தமுள்ள 8 பிளாக்குகளிலும் சோதனையிட்டனர்.

10 பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து போலீசார் ஒவ்வொரு பிளாக்கிற்கும் சென்றனர். பாளை சிறையில் ஆயிரத்து 368 கைதிகள் உள்ளனர்.

இவற்றில் விசாரணை கைதிகள் மட்டுமின்றி, தண்டனை கைதிகளும் உள்ளனர்.

அவர்களிடம் தடை செய்யப்பட்ட பொருட்களான பீடி, சிகரெட், கஞ்சா, மதுபானங்கள் மற்றும் சொகுசு வாழ்க்கைக்குரிய பொருட்கள் உள்ளதா என்பது குறித்து அறைகள் தோறும் அலசினர்.

சிறையில் காணப்படும் கழிப்பறைகள், மருத்துவமனை, நூலகம் ஆகியவற்றிலும் இச்சோதனை நடத்தப்பட்டது. இதில் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதும் சிக்கவில்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு பிளாக்கில் தீப்பெட்டிக்கு பதிலாக பீடி, சிகரெட்டுகளை உரசி பற்ற வைக்கும் கம்பி மட்டுமே சிக்கியதாக கூறப்படுகிறது.

ஆண்டுக்கணக்கில் சிறையில் உள்ள தண்டனை குற்றவாளிகளுக்கு ஏதேனும் சலுகைகள் உள்ளதா என்பதை கண்டறிய அவர்களது அறைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

 போலீஸ் அதிகாரிகளுடன் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர்களுடன் சென்றிருந்தனர். போலீஸ் மோப்பநாயும் உடன் அழைத்து செல்லப்பட்டது.

இன்று அதிகாலை 5. 30 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 2 மணி நேரம் நடந்தது. கைதிகள் மத்தியில் ஏற்கனவே சோதனை குறித்த விழிப்புணர்வு இருந்ததால் எவ்வித பொருளும் போலீசாருக்கு சிக்கவில்லை.

பாளை மத்திய சிறையில் அதிகாலையில் நடந்த சோதனையால் கைதிகள் மத்தியில் பரபரப்பு நிலவியது.

.

மூலக்கதை