ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் ஹாங்காங்கிடம் போராடி வென்றது இந்தியா

தினகரன்  தினகரன்
ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் ஹாங்காங்கிடம் போராடி வென்றது இந்தியா

துபாய்: ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், இந்திய அணி லீக் ஆட்டத்தில் ஹாங்காங் அணியை போராடி வீழ்த்தியது. துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இந்திய அணி தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் களமிறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 7.4 ஓவரில் 45 ரன் சேர்த்தனர். ரோகித் 23 ரன் எடுத்து (22 பந்து, 4 பவுண்டரி) எசான் கான் பந்துவீச்சில் நிஸாகத் வசம் பிடிபட்டார்.இதைத் தொடர்ந்து, தவான் - அம்பாதி ராயுடு ஜோடி அபாரமாக விளையாடி ரன் சேர்த்தது. இருவரும் 2வது விக்கெட்டுக்கு116 ரன் சேர்த்து அசத்தினர். ராயுடு 60 ரன் (70 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி எசான் நவாஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் மெக்கெச்னியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, தவான் ஒருநாள் போட்டிகளில் தனது 14வது சதத்தை நிறைவு செய்தார். தவான் 127 ரன் (120 பந்து, 15 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த டோனி டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். தினேஷ் கார்த்திக் 33 ரன் (38 பந்து, 3 பவுண்டரி), புவனேஷ்வர் குமார் 9 ரன்னில் வெளியேற, ஷர்துல் தாகூர் டக் அவுட்டானார். இந்தியா 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன் குவித்தது. கேதார் ஜாதவ் 28 ரன் (27 பந்து, 1 சிக்சர்), குல்தீப் யாதவ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.ஹாங்காங் பந்துவீச்சில் ஸ்பின்னர் கிஞ்சித் திவாங் ஷா (22 வயது) 9 ஓவரில் 39 ரன் விட்டுக் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். இவர் மும்பையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, 50 ஓவரில் 286 ரன் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் ஹாங்காங் அணி களமிறங்கியது. நிஷாஹத் கான், அன்சுமன் ராத் நிதானமாக விளையாடி முதல் விக்ெகட் 174 ரன் எடுத்து வலுவான தொடக்கத்தை கொடுத்தனர். அன்சுமன் ராத் 73 ரன்னிலும், நிஷாஹத் கான் 92 ரன்னிலும் அவுட்டாகினர். அதன் பின் வந்தவர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாக ஹாங்காங் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 259 ரன் எடுத்து 26 ரன் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றது.

மூலக்கதை