ரபேல் போர் விமான ஒப்பந்தம் உண்மைகளை மறைக்க நிர்மலா சீதாராமன் முயற்சி : ஏ.கே. அந்தோணி குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
ரபேல் போர் விமான ஒப்பந்தம் உண்மைகளை மறைக்க நிர்மலா சீதாராமன் முயற்சி : ஏ.கே. அந்தோணி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘‘ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் உள்ள உண்மைகளை மறைக்க ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் முயற்சி மேற்கொள்கிறார்’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி குற்றம் சாட்டியுள்ளார்.மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது,  பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, ஒரு விமானத்துக்கு ₹526 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி நேரடியாக பிரான்ஸ் சென்று ஒப்பந்தம் செய்ததில் ஒரு விமானத்தின் விலையை ₹1,670 கோடி என நிர்ணயித்து உள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. ஆனால், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘காங்கிரஸ் ஆட்சியில் வாங்க நினைத்த விலையை விட 9 சதவீதம் விலை குறைவாகவே விமானங்களை வாங்குகிறோம்’ என்றார். அவரது கருத்துக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஏ.கே. அந்தோணி நேற்று இது தொடர்பாக கூறியதாவது: பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து விளக்கம் அளிக்கும்போது காங்கிரஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பி உள்ளார். குறிப்பாக, 2013ல் இந்த ஒப்பந்தத்தில் எனது தலையீடு அதிகம் இருந்ததாகவும், அதனால் ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு சவப்பெட்டியில் இறுதி ஆணி அடிக்கப்பட்டது என்றும் அவர் கூறியது மிகவும் தவறான கருத்து.நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதை மறுத்து, ஒப்பந்த விவகாரத்தை திசை திருப்பவே இது பயன்படும். ஏனெனில், காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை விட தற்போது குறைவான விலைக்கே ரபேல் போர் விமானம் வாங்கப்பட்டு இருப்பதாக நிர்மலா சீதாராமன் கூறுகிறார். பாஜ அரசு வாங்கும் ரபேல் விமானத்தின் விலை குறைவு என்றால் 36 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்?.கடந்த 2000ம் ஆண்டே இந்திய விமானப்படைக்கு 126 விமானங்கள் வேண்டும் என்று மதிப்பிடப்பட்டது. 2000ம் ஆண்டைவிட இப்போது எல்லையில் அதிகமான எச்சரிக்கையை எதிர்க்கொண்டு வருகிறோம்.  அவர்கள் நாங்கள் வாங்கும் விமானங்களின் விலை குறைவுதான் என்று சொல்லி வருபவர்கள், வெறும் 36 விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்?. 126 விமானங்கள் வாங்க வேண்டியதுதானே?எனவே, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 126 விமானங்கள் வாங்க நிர்ணயிக்கப்பட்ட விலை விவரத்தையும், தற்போது 36 விமானங்கள் வாங்க நிர்ணயிக்கப்பட்ட விலை விவரத்தையும் மோடி அரசு வெளியிட்டு, இந்த விவகாரத்தில் பொதுமக்கள் மத்தியில் எழுந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ்  கேட்டுக்கொள்கிறது.ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் உள்ள உண்மைகளை மறைக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முயற்சிக்கிறார். மேலும் பொதுத்துறை நிறுவனமாக இந்துஸ்தான் ஏரோநெட்டிக்ஸ் நிறுவனத்தின் பெயரை நமது நாட்டிலும், வெளிநாடுகள் மத்தியிலும் சீர்குலைக்கும் பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்த அரசு குற்றமுள்ள அரசு. அவர்கள் ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்துள்ளனர். அதனால்தான் இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட மறுத்து அரசு பயந்து ஓடுகிறது. இதில் மேலும் விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிவரக்கூடும். எனவே நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்தால்தான் உண்மை வெளிவரும். இவ்வாறு அவர் கூறினார்₹9,100 கோடி ராணுவ தளவாடம் வாங்க ஒப்புதல்இந்திய ராணுவத்திற்கு தளவாடங்கள் வாங்குவதற்காக ராணுவ கொள்முதல் கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. இதில் ₹9,100 கோடி மதிப்பில் ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் இரண்டு ஆகாஷ் ஏவுகணையும் அடங்கும். இதேபோல் டி90 ராணுவ பீரங்கியை வடிவமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மூலக்கதை