டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உட்பட 11 எம்எல்ஏக்கள் அக்.25ல் ஆஜராக சம்மன்

தினகரன்  தினகரன்
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உட்பட 11 எம்எல்ஏக்கள் அக்.25ல் ஆஜராக சம்மன்

புதுடெல்லி: டெல்லி தலைமை செயலாளர் தாக்கப்பட்ட வழக்கில், முதல்வர் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 19ம்  தேதி நள்ளிரவில் முதல்வர் இல்லத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், முதல்வர்  ெகஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா முன்னிலையில் ஆம் ஆத்மி  எம்எல்ஏக்கள் தாக்கியதாக தலைமை செயலாளர் அன்சு பிரகாஷ் புகார் அளித்தார்.  இரு தினங்களுக்கு பிறகு கெஜ்ரிவால் இல்லத்தில் அதிரடி சோதனை நடத்திய  போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பினர். இதையடுத்து, ஆத்மி எம்எல்ஏக்கள் அமனதுல்லா  கான், பிரகாஷ் ஜர்வால் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கடந்த மே 18ம் தேதி,  கெஜ்ரிவாலிடம் போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். சிசோடியா, 11 ஆம்  ஆத்மி எம்எல்ஏக்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.  போலீசார் கெஜ்ரிவால்,  சிசோடியா உள்ளிட்டோர் மீது 1,300 பக்க குற்றப்பத்திரிகையை கடந்த மாதம் 13ம் தேதி  தாக்கல் செய்தனர். அதில், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், அரசு ஊழியரை  கடமையை செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ்  குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இந்நிலையில், கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர்  நீதிபதி சமர் விஷால் முன்பு நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல்வர் கெஜ்ரிவால்,  துணை முதல்வர் சிசோடியா மற்றும் 11 எம்எல்ஏ.க்கள் வரும் அக்டோபர் 25ம் தேதி  நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

மூலக்கதை