வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகார்- கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் கைதாவாரா?

தினகரன்  தினகரன்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகார் கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் கைதாவாரா?

பெங்களூரு: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கர்நாடக மாநில  நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.  கர்நாடக அமைச்சர்  டிகே.சிவகுமார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக எழுந்த  புகாரைத் தொடர்ந்து கடந்தாண்டு ஆகஸ்ட் 2ம் தேதி அவருக்கு சொந்தமான வீடு,  அலுவலகங்கள் உள்பட பல இடங்களில் சோதனை நடந்தது. டெல்லியில் உள்ள அவரது அப்பார்ட்மென்ட்  வீட்டிலும் சோதனை நடத்தினர். இதில் ₹8.50 கோடி ரொக்க பணம் கிடைத்தது. இது  தொடர்பாக சிவகுமார் மட்டுமில்லாமல் அவரது தாயார், மனைவி, மகள், சகோதரர்  உள்பட பலரை நேரில் அழைத்து முதல் கட்ட விசாரணை நடத்தினர். இந்நிலையில்  வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்துள்ள புகாரில் பல ஆவணங்கள்  சிக்கியுள்ளதை தொடர்ந்து அமைச்சர் டி.கே.சிவகுமார், டெல்லியில் உள்ள  கர்நாடக பவன் அதிகாரி ஆஞ்சநேயா, அனுமந்தையா, சச்சின் நாராயண் மற்றும்  என்.ராஜேந்திரா ஆகிய 5 பேர் மீது மத்திய அமலாக்கத்துறையினர் நேற்று வழக்குப்  பதிவு செய்துள்ளனர்.இப்புகார் தொடர்பாக சிவகுமார் உள்பட ஐந்து பேரையும்  எந்த நேரத்திலும் அவர்கள் கைது செய்யும் வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. இதே  புகார் தொடர்பாக ஏற்கனவே வருமான வரித்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.  அவ்வழக்கில் கைது செய்யாமல் இருக்க பெங்களூரு பொருளாதார குற்றவியல்  நீதிமன்றத்தில் டி.கே.சிவகுமார் முன்ஜாமீன் பெற்றுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை