நவராத்திரி விழா கொண்டாட்டத்துக்கு கொலு பொம்மை தயாரிப்பு மும்முரம்

தினகரன்  தினகரன்
நவராத்திரி விழா கொண்டாட்டத்துக்கு கொலு பொம்மை தயாரிப்பு மும்முரம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இங்கு கொலு பொம்மைகள் ₹100 முதல் ₹2,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.மகாளய அமாவாசைக்கு மறுநாளான அக்டோர் 8ம் தேதி நவராத்திரி விழா துவங்குகிறது. இதற்காக தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.இதுகுறித்து கும்பகோணம் அடுத்த சத்திரம்கருப்பூரில் பரம்பரை தொழிலாக நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கும் ரமேஷ் கூறியதாவது: எனது மூதாதையர் காலத்திலிருந்து கொலு பொம்மைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது காஞ்சி பெரியவர், மும்மூர்த்தி சுவாமி, ராமானுஜம், கருடாழ்வார், கிருஷ்ணன், வெங்கடாஜலபதி, ராகவேந்திர சுவாமி, மாரியம்மன், அன்னபூரணி, சரஸ்வதி, பாண்டுரங்கன் சுவாமி உள்ளிட்ட சுவாமி சிலைகளையும், பசு, குதிரை, இசை கருவிகள் உள்ளிட்ட பொருட்களையும் தயாரித்து வருகிறோம். ரசாயனம் இல்லாமல் முழுவதும் காகித  கூழால் பொம்மைகள் தயார் செய்கிறோம்.இந்த பொம்மைகளை அழகாக்க பல வண்ணங்கள் தீட்டப்பட்டு தமிழகம் மட்டுமின்றி அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் பொம்மைகள் ₹100 முதல் ₹2,000 வரை விற்கப்படுகிறது. ஆண்டு தொடக்கத்திலேயே எங்களுக்கு பொம்மைகள் வேண்டுமென தனியார் வியாபாரிகள், கோயில், பன்னாட்டு நிறுவனங்கள், தனிநபர்களிடமிருந்து ஆர்டர்கள் வந்து விடுகிறது. இதனால் நாங்கள் ஆண்டு முழுவதும் இந்த கொலு பொம்மைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது நவராத்திரி துவங்க உள்ளதால் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. தற்போது ஜிஎஸ்டி வரி விதிப்பால் மூலப்பொருட்களின் விலை உயர்வால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு விற்பனை குறைந்துள்ளது என்றார்.ஜிஎஸ்டி வரியால் காதிகக்கூழின் விலை 50 சதவீத விலை உயர்ந்துள்ளது. அதேபோல் பெயிண்ட் விலை மற்றும் மேலும் தொழிலாளர்களின் கூலியும் உயர்ந்துள்ளது. இதனால் கொலு பொம்மைகளை அதிக விலைக்கு விற்க வேண்டியுள்ளது. எனவே கொலு பொம்மைகளின் விற்பனை குறைந்து வருகிறது.

மூலக்கதை