ஒவ்வொரு லிட்டரிலும் ரூ.29.54 கிடைக்கிறது : பெட்ரோல், டீசல் வரிகளில் தமிழக அரசுக்கு ரூ.15,500 கோடி

தினகரன்  தினகரன்
ஒவ்வொரு லிட்டரிலும் ரூ.29.54 கிடைக்கிறது : பெட்ரோல், டீசல் வரிகளில் தமிழக அரசுக்கு ரூ.15,500 கோடி

 பெட்ரோல், டீசல் மத்திய அரசுக்கு கடந்த நிதியாண்டில் வருவாய் ₹2.29 லட்சம் கோடி. தமிழகத்துக்கு ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலிலும் மத்திய அரசு வரியில் உள்ள பங்கையும் சேர்த்து ₹29.54 டீசலில் ₹21.92 வருவாய் கிடைக்கிறது. மத்திய அரசுக்கு ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலிலும் ₹19.48, ₹15.33 கிடைக்கிறது.புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு வரி வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. தமிழகத்துக்கு பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரி மூலம் ₹15,500 கோடி வருவாய் கிடைத்துள்ளது.கடந்த ஒன்றரை மாதத்துக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 10 காசு உயர்ந்து ₹85.41 ஆகவும், டீசல் 10 காசு அதிகரித்து ₹78.10 ஆகவும் இருந்தது. பெட்ரோல் டெல்லியில் ₹82.16, மும்பையில் ₹89.54 ஆகவும், டீசல் டெல்லியில் ₹73.87, மும்பையில் ₹78.42 ஆகவும் அதிகரித்துள்ளது.  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையில் வரிகள்தான் அதிகம். ஆனால், வருவாய் குறைந்து விடும் என்பதால் மத்திய, மாநில அரசுகள் வரிகளை குறைக்க முன்வருவதே இல்லை. ராஜஸ்தான், ஆந்திரா, மேற்கு வங்கம், கர்நாடகா அரசுகள் மட்டும், பெட்ரோல், டீசல் விலையை தற்காலிகமாக கட்டுப்படுத்த வரியை குறைத்துள்ளன.  மத்திய அரசு கலால் வரியை 12 முறை உயர்த்தி பெட்ரோலுக்கு ₹19.48, டீசலுக்கு ₹15.33 வசூலிக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் 2 ரூபாய் குறைத்தது. பெட்ரோலிய கலால் வரி மூலம் மத்திய அரசு 2 016-17 நிதியாண்டில் ₹2.42 லட்சம் கோடி, 2017-18 நிதியாண்டில் ₹2.29 லட்சம் கோடி ஈட்டியுள்ளது.கச்சா எண்ணெய்க்கு சுங்க வரி இல்லை. ஆனால், பெட்ரோல், டீசலுக்கு 2.5 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. எண்ணெய் உற்பத்தி துறை மேம்பாட்டுக்காக செஸ் வரி 20 சதவீதம், என்சிசிடி வரி ஒரு மெட்ரிக் டன்னுக்கு ₹50 வசூலிக்கப்படுகிறது. மாநிலங்களை பொறுத்தவரை பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரி வருவாய் 2016-17ல் ₹1.66 லட்சம் கோடியில் இருந்து 2017-18ல் ₹1.84 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக வாட் வரி மூலம் பெட்ரோலுக்கு 39 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் கடந்த நிதியாண்டில் இந்த மாநிலம் ₹25,611 கோடி ஈட்டியுள்ளது. அதற்கு அடுத்ததாக உத்தர பிரதேசம் ₹17,420 கோடி, தமிழகம் ₹15,507 கோடி வாட் வரி வசூலித்துள்ளன. தமிழகத்தில் மத்திய அரசை விட பெட்ரோலிய வாட் வரி வருவாய் அதிகம்.  தமிழகத்தில் வாட் வரி பெட்ரோலுக்கு 32.16 சதவீதம், டீசலுக்கு 24.08 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. தமிழக அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ₹21.36, டீசலுக்கு ₹15.45 வாட் வரியாக வசூலிக்கிறது. இது தவிர மத்திய அரசு கலால் வரியில் மாநில அரசின் பங்காக பெட்ரோலுக்கு ₹8.18 டீசலுக்கு ₹6.47 கிடைக்கிறது. இதன்படி ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் விற்பனையிலும் ₹29.54 டீசலுக்கு ₹21.92 தமிழக அரசுக்கு வரி வருவாயாக கிடைக்கிறது.

மூலக்கதை