இனி ரேஷன் பொருள் வாங்க...கை வை !

தினமலர்  தினமலர்
இனி ரேஷன் பொருள் வாங்க...கை வை !

ரேஷனில், இனி பொருட்கள் வாங்க வேண்டுமானால், கைரேகை பதிவு கட்டாயம். அதற்கான, 'பயோமெட்ரிக்' பதிவு முறை, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், அக்டோபர், 15 முதல், அமலுக்கு வருகிறது.


தமிழக ரேஷன் கடைகளில், 1.87 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, மாதம், 20 கிலோ அரிசி இலவசமாகவும், துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்றவை, குறைந்த விலையிலும் வழங்கப்
படுகின்றன.நான்கு உறுப்பினர்களுக்கு மேல் உள்ள கார்டுகளில், ஒவ்வொரு நபருக்கும், கூடுதலாக, ஐந்து கிலோ அரிசி வழங்கப்படுகிறது.

இழப்பு



அரிசிக்கு பதில், விருப்பத்திற்கு ஏற்ப, ஐந்து அல்லது, 10 கிலோ கோதுமையும் இலவசமாக வாங்கி கொள்ளலாம். இவற்றுக்காக, தமிழக அரசு, நடப்பாண்டில், 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிஉள்ளது.அரிசி கார்டு வைத்திருக்கும் பலர், ரேஷன் பொருட்களை வாங்குவதில்லை. அவர்கள், தங்கள் கார்டுகளை, வேலையாட்கள், உறவினர்களிடம் கொடுத்து, பொருட்களை வாங்கி கொள்ளும்படி கூறுகின்றனர்.
இதனால், தேவைக்கு அதிகமாக கிடைக்கும் ரேஷன் பொருட்களை, வெளியில் விற்கின்றனர்.
கடை ஊழியர்களும், யாரும் வாங்காத பொருட்களை, விற்பனை செய்தது போல பதிவு செய்து, வியாபாரிகளிடம் விற்கின்றனர். இதனால், அரசுக்கு, இழப்பு ஏற்படுகிறது. இதையடுத்து, கார்டு
தாரர்களின் விரல் ரேகையை பதிவு செய்து, பொருட்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, உணவு துறை முடிவு செய்தது.
இதற்காக, 34 ஆயிரத்து, 773 ரேஷன் கடைகளுக்கு, பயோமெட்ரிக் கருவிகள் மற்றும், 'பிரின்டர்' சாதனங்கள் வாங்க, மே, 29ல், 'டெண்டர்' கோரப்பட்டது. அதில், நான்கு நிறுவனங்கள் பங்கேற்றன. அவற்றின் தொழில்நுட்ப விபரங்களை, ஆய்வு செய்து முடித்துள்ள அதிகாரிகள், இந்த வாரத்தில், விலை குறைப்பு பேச்சு நடத்த உள்ளனர்.
பின், தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்து, இம்மாத இறுதிக்குள், கொள்முதல் ஆணை வழங்க உள்ளனர். இதையடுத்து, அக்., 15ம் தேதி முதல், விரல் ரேகை பதிவு செய்து, பொருட்கள் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.
இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசின், 'ஆதார்' விபரங்கள் அடிப்படையில், 1.97 கோடி குடும்பங்களுக்கு, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள்
வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, ஆதார் கார்டில், விரல், விழி ரேகைகள் பதிவாகியுள்ளன. இதனால், பயோமெட்ரிக் கருவியில், விரல் ரேகை பதிவு செய்ததும், அந்த விபரம், கடையில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில் தெரியும்.

அதிகரிப்பு



ஒரு ரேஷன் கடையில், 500 அரிசி கார்டுதாரர்கள் இருந்தால், 300 பேர் மட்டும் முறையாக
வருவர். மற்றவர்கள், தெரிந்தவர்களிடம், கார்டுகளை கொடுத்து அனுப்புவர். பயோமெட்ரிக் திட்டத்திற்கு முன்னோட்டமாக, குடும்ப தலைவர் அல்லது கார்டில் உள்ள உறுப்பினர்கள் வந்தால் மட்டுமே, தற்போது, பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இதனால், தற்போது கடைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துஉள்ளது. ஏற்கனவே, ஆகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்ட, பயோமெட்ரிக் திட்டம், உறுதியாக அடுத்த மாதம், 15ல் அமல்படுத்தப்படும். இனிமேல், விரல் ரேகை பதிவு செய்தால் மட்டுமே, ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். இதனால், ரேஷன் பொருட்கள் வீணாவது தடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் இன்று ஆய்வு!


உணவு பொருட்கள், ஏழை மக்களுக்கு, ஒழுங்காக கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய, உணவு துறை அமைச்சர், உயரதிகாரிகள், அடிக்கடி ரேஷன் கடைகளில் ஆய்வு செய்வர். நாமக்கல்லை சேர்ந்த, தனியார் நிறுவனத்திடம் இருந்து, அதிகளவில் ரேஷன் பருப்பு வாங்கியதில்,
முறைகேடுகள் நடந்தன.
இதையடுத்து, பருப்பு சப்ளை செய்த நிறுவனங்கள் மற்றும் வாணிப கழக அலுவலகத்தில், வருமான வரித்துறை, சமீபத்தில் சோதனை நடத்தியது. இதனால், முடங்கிய ஆய்வு பணியை, அமைச்சர் மற்றும் அதிகாரிகள், சென்னையில், இன்று முதல், மீண்டும் துவக்க உள்ளனர்.

- நமது நிருபர் -

மூலக்கதை