18 எம்.எல்.ஏ.,க்கள் பதவி பறிபோய் ஓராண்டாச்சு!

தினமலர்  தினமலர்
18 எம்.எல்.ஏ.,க்கள் பதவி பறிபோய் ஓராண்டாச்சு!

முதல்வருக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய, தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது.


'நோட்டீஸ்'



தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 19 பேர், 2017 ஆக., 22ல், கவர்னரை சந்தித்து, முதல்வருக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக, கடிதம் கொடுத்தனர். அவர்களை தகுதி நீக்கம் செய்யும்படி, சட்டசபை அரசு கொறடா ராஜேந்திரன், ஆக., 24ல், சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார்.அதை ஏற்று, அந்த எம்.எல்.ஏ.,க்களிடம் விளக்கம் கேட்டு, சபாநாயகர், 'நோட்டீஸ்' அனுப்பினார். அதற்கு, 19 எம்.எல். ஏ.,க்களும், இடைக்கால பதில் அளித்தனர்.
முழுமையான விளக்கம் அளிக்க, செப்., 7ல் நேரில் ஆஜராக வேண்டும் என, சபாநாயகர் மீண்டும், நோட்டீஸ் அனுப்பினார்.அன்றைய தினம், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ., ஜக்கையன், சபாநாயகரை சந்தித்து விளக்கம் கொடுத்து, முதல்வர் அணிக்கு தாவினார். மற்ற எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரையும், தகுதி நீக்கம் செய்து, 2017 செப்., 18ல், சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

எதிர்பார்ப்பு



அதை எதிர்த்து, அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்; வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. தினகரனை ஆதரித்தால், அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற, ஆசையில் சென்றவர்கள், இருந்த பதவியை இழந்து, நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்தபடி உள்ளனர்.

மூலக்கதை