‛கத்துக்குட்டி' ஹாங்காங்கை போராடி வென்றது இந்தியா; இன்று பாக்., உடன் மோதல்

தினமலர்  தினமலர்
‛கத்துக்குட்டி ஹாங்காங்கை போராடி வென்றது இந்தியா; இன்று பாக்., உடன் மோதல்

துபாய்: ஹாங்காங் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தினார்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை கிரிக்கெட் நடக்கிறது. 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, ஹாங்காங் மோதின. 'டாஸ்' வென்ற ஹாங்காங் கேப்டன் அன்ஷுமன் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ராகுல், மணிஷ் பாண்டேவுக்கு இடம் கிடைக்கவில்லை. ராஜஸ்தானின் இளம் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது அறிமுக வாய்ப்பு பெற்றார்.

தவான் அபாரம்:

இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி துவக்கம் கொடுத்தது. ரோகித் (23) நிலைக்கவில்லை. தவானுடன் இணைந்த அம்பதி ராயுடு (60) அரைசதம் கடந்து அவுட்டானார். உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான், ஒருநாள் அரங்கில் 14வது சதம் அடித்தார். இவர் 127 ரன்கள் (120 பந்து) எடுத்தார். தோனி 3வது பந்தில் 'டக்' அவுட்டானார். தினேஷ் கார்த்திக் (33) ஆறுதல் தர, புவனேஷ்வர் (9) நிலைக்கவில்லை. இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 285 ரன்கள் எடுத்தது. கேதர் ஜாதவ் (28) அவுட்டாகாமல் இருந்தார்.

'சூப்பர்' ஜோடி :

ஹாங்காங் அணிக்கு அன்ஷுமன், நிஜாகத் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இந்திய அணியின் பவுலிங், பீல்டிங் சுமாராக அமைய இருவரும் அரைசதம் எட்டினர். இதனால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். முதல் விக்கெட்டுக்கு 174 ரன் சேர்த்த நிலையில் ஒரு வழியாக குல்தீப் சுழலில் அன்ஷுமன் (73) அவுட்டானார். அடுத்த ஓவரில் 92 ரன் எடுத்த நிஜாகத்தை, கலீல் அகமது வெளியேற்றினார். இது இவரது முதல் சர்வதேச விக்கெட்.

கார்டர் (3), பாபர் (18) நீடிக்கவில்லை. கின்சிட் (17), அய்ஜாஸ் (0) இருவரும் சகாலின் ஒரே ஒவரில் திரும்ப, இதன் பின் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஹாங்காங் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 259 ரன்கள் மட்டும் எடுத்து வீழ்ந்தது. தன்வீர் (12), நவாஸ் (2) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக கலீல் அகமது, சகால் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி 'சூப்பர்-4' சுற்றுக்கு முன்னேறியது. இரண்டு போட்டியில் தோற்ற ஹாங்காங் அணி, தொடரில் இருந்து வெளியேறியது.பாக், உடன் இன்று மோதல் :

இந்திய அணி தனது இரண்டாவது லீக் போட்டியில், பாகிஸ்தானை இன்று எதிர் கொள்கிறது. ஹாங்காங் உடனான போட்டியில் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு இந்திய பவுலர்கள் ஜொலிக்கவில்லை. இரு அணிகளும் விட்டுக் கொடுக்காமல் விளையாடும் என்பதால், இன்றைய போட்டியில் பந்துக்கு பந்து பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாங்காங் சிக்ஸ் அதிகம்:

ஹாங்காங் உடனான முதல் லீக் போட்டியில் இந்திய வீரர்கள் மொத்தம் 5 சிக்சர்கள் மட்டுமே அடித்தனர். ஆனால் ஹாங்காங் வீரர்கள் 6 சிக்சர்கள் அடித்து அதிரடி காட்டினர்.

மூலக்கதை