இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

தினகரன்  தினகரன்
இந்தியா  பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் இன்று நடைபெறும் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த பரபரப்பான போட்டி துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மாலை 5.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆட்டங்களில் எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளும் ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு மோத உள்ளதால் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் 18ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதியிருந்தன. அந்த போட்டியில் பகார் ஸமான் அதிரடியாக சதம் விளாச, பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன் குவித்தது. அடுத்து களமிறங்கிய இந்தியா முகமது ஆமிர், ஹசன் அலி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தோல்வியைத் தழுவியது. ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாக்கிய அந்த தோல்விக்கு, ஆசிய கோப்பையில் இந்திய அணி பதிலடி கொடுக்கும் என நம்பலாம். கேப்டன் கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தாலும், ரோகித் தலைமையிலான இந்திய அணி எந்த சவாலுக்கும் தயாராகவே உள்ளது. இன்றைய போட்டியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேரில் பார்த்து ரசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், அம்பாதி ராயுடு, மணிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா, குல்தீப் யாதவ், யஜ்வேந்திர சாஹல், ஷர்துல் தாகூர், தினேஷ் கார்த்திக், கலீல் ஆகமது.பாகிஸ்தான்: சர்பராஸ் அகமது (கேப்டன்/ கீப்பர்), பகார் ஸமான், ஷான் மசூட், பாபர் ஆஸம், ஹரிஸ் சோகைல், இமாம் உல் ஹக், ஆசிப் அலி, சதாப் கான், முகமது நவாஸ், பாகீம் அஷ்ரப், ஹசன் அலி, முகமது ஆமிர், சோயிப் மாலிக், ஜுனைத் கான், உஸ்மான் கான், ஷாகீன் அப்ரிடி.

மூலக்கதை