பான் பசிபிக் ஓபன்: 2வது சுற்றில் அசரென்கா

தினகரன்  தினகரன்
பான் பசிபிக் ஓபன்: 2வது சுற்றில் அசரென்கா

டோக்கியோ: பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா தகுதி பெற்றார். முதல் சுற்றில் ஜப்பானின் குருமி நாராவுடன் நேற்று மோதிய அசரென்கா 6-4, 7-5 என்ற நேர் செட்களில் வென்றார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 52 நிமிடத்துக்கு நீடித்தது. இந்த தொடரில் இருவருமே ‘வைடு கார்டு’ சிறப்பு அனுமதியுடன் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது. மற்றொரு முதல் சுற்றில் கனடாவின் யூஜெனி பவுச்சார்டு 4-6, 4-6 என்ற நேர் செட்களில் அலிசான் ரிஸ்கியிடம் (அமெரிக்கா) போராடி தோற்றார். முன்னணி வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (5வது ரேங்க், அமெரிக்கா) 4-6, 4-6 என்ற நேர் செட்களில் டோனா வேகிச்சிடம் (குரோஷியா) அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். ஜோகன்னா கோன்டா (இங்கிலாந்து), பார்போரா ஸ்டிரைகோவா (செக்.), ஆஷ்லி பார்தி (ஆஸி.) ஆகியோரும் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மூலக்கதை