திருப்பதி கோயில் பிரம்மோற்சவ 6ம் நாள் அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி: இன்று மாலை தங்க ரத உற்சவம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருப்பதி கோயில் பிரம்மோற்சவ 6ம் நாள் அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி: இன்று மாலை தங்க ரத உற்சவம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 6ம் நாளான இன்று காலை அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5வது நாளான நேற்றிரவு பிரம்மோற்சவத்தின் முக்கிய சேவையான கருட சேவை நடைபெற்றது.

இதில் மலையப்ப சுவாமி தங்கம், வைரம், மரகதம் கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கருட வாகனத்தில் மாட வீதியில் பவனி வந்தார். அப்போது நான்கு மாடவீதியில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்தனர்.

மேலும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட பெரிய எல்இடி திரைகளில் பார்த்தும் தரிசனம் செய்தனர். இதையடுத்து 6ம் நாளான இன்று காலை மலையப்பசுவாமி அனுமந்த வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அப்போது திரளான பக்தர்கள் நான்கு மாடவீதியின் இருபுறமும் திரண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

மேலும், வீதி உலாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள், மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் ஆடியபடி பங்கேற்றனர். த்ரேதா யுகத்தில் தனக்கு சேவை செய்த பக்தனான அனுமந்தனை வாகனமாக கொண்டு, ராமர் அலங்காரத்தில் வீதி உலா வந்தார். அனுமந்தனின் பக்தியை பக்தர்களுக்கு உணர்த்தவும், கிருஷ்ணர், ராமர், சீனிவாச பெருமாள் அனைவரும் தானே என்னும் விதமாகவும் இந்த அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.

இன்று மாலை 5 மணிக்கு 32 அடி உயரமுள்ள தங்க ரதத்தில் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி வலம் வர உள்ளனர். இதையடுத்து இரவு கஜ வாகன உற்சவம் நடைபெற உள்ளது.

இதில் தங்க யானை வாகனத்தில் மலையப்பசுவாமி வீதியுலா நடைபெற உள்ளது.

.

மூலக்கதை