டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பிலிருந்து சேவாக் பதவி விலகியது ஏன்?: பரபரப்பு தகவல்கள் அம்பலம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பிலிருந்து சேவாக் பதவி விலகியது ஏன்?: பரபரப்பு தகவல்கள் அம்பலம்

புதுடெல்லி: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் மற்றும் ஆகாஷ் சோப்ரா, ராகுல் சங்வி ஆகிய முன்னாள் வீரர்கள்   டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பில் இருந்து பதவி விலகியுள்ளனர். இந்த திடீர் விலகல் குறித்து பல்வேறு தகவல்கள்  தற்போது வெளியாகி பரபரப்பினை உண்டாக்கியுள்ளது.
சமீபத்தில் டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பில் கம்பீர், சேவாக், ஆகாஷ் சோப்ரா, ராகுல் சங்வி ஆகிய முன்னாள் வீரர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது. இந்த குழுவில் இருந்து தான் சேவாக் உள்ளிட்ட மூவர் விலகியுள்ளனர்.

இதன் பின்னணி குறித்து தற்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி பரபரப்பினை உண்டாக்கி உள்ளது. மனோஜ் பிரபாகர் மீது  கடந்த  2000ம்  ஆண்டில் மேட்ச் பிக்ஸிங் புகார் எழுந்தது.

 கம்பீருக்கு இது போன்ற புகார் உள்ளவர்கள் கிரிக்கெட் அமைப்பில் இருப்பது பிடிக்காமல் தான் இதை எதிர்க்கிறார் என கூறப் படுகிறது.

மேலும் டெல்லி மாநில கிரிக்கெட்டில் சேவாக், ஆகாஷ் சோப்ரா மற்றும் ராகுல் சங்வி இணைந்து அந்த மாநில அமைப்பின் மற்ற கமிட்டிகள் மற்றும் பயிற்சியாளர்களை நியமிக்கும் பணிகளை செய்தனர். இவர்களது அதிகாரம் மேலோங்கி இருந்தது.

இவர்கள் பந்துவீச்சு பயிற்சிக்கு டெல்லி மாநிலத்தின் முன்னாள் பயிற்சியாளர் மனோஜ் பிரபாகர் பெயரை கூறியுள்ளார் சேவாக். இதனை நிர்வாகம் ஏற்க மறுத்துள்ளது.

மேலும் சேவாக்கிற்கு ஆப்பு வைக்கும் விதமாக இதனிடையே 3 நபர் கமிட்டியில் நான்காவதாக கம்பீரை இணைத்துள்ளனர். அவர் மனோஜ் பிரபாகர் பயிற்சியாளராக இருப்பதை கடுமையாக எதிர்த்ததாக கூறப்படுகிறது.



அதே போல, சேவாக் உள்பட மற்ற  மூவர் நான்காவது நபர் உள்ளே நுழைவதை எதிர்த்துள்ளனர். இந்த நிலையில் கடுமையான பனிப்போர் நிலவி வந்த நிலையில் திடீரென்று  நேற்று சேவாக் உள்பட 3 பேரும்  பதவி விலகியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து பேசிய  டெல்லி கிரிக்கெட் அமைப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், “கம்பீர், சேவாக் இடையே பிரச்சனை என சொல்வது தவறாகும். இன்னும் சில நாட்களில் புதிய விதிகள் கொண்டு வரப் போகிறோம்.

அதன்படி, ஏற்கனவே ஒரு கிரிக்கெட் அணியில் பணிபுரிபவர்கள் இங்கே இருக்க முடியாது. சேவாக் டெல்லி கிரிக்கெட் அமைப்பின் சிறப்பு ஆலோசகர் பதவியிலும், ராகுல் சங்வி மும்பை இந்தியன்ஸ் அணி பதவியிலும் இருக்கிறார்கள்.

அதனால், அவர்களுக்கு நாம் விலக வேண்டும் என தெரியும்” என கூறி இருக்கிறார்.

.

மூலக்கதை