பஸ் ஸ்டாப்பில் விளம்பர போஸ்டர் பஸ் விவரம் தெரியாமல் திண்டாடும் பயணிகள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பஸ் ஸ்டாப்பில் விளம்பர போஸ்டர் பஸ் விவரம் தெரியாமல் திண்டாடும் பயணிகள்

ஆவடி: சென்னை புறநகர் பகுதிகளான அம்பத்தூர், பாடி, அத்திப்பட்டு, கள்ளிக்குப்பம், புதூர், கொரட்டூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை,  திருமுல்லைவாயில், ஆவடி, கோவில்பாதாகை, அண்ணனூர், பட்டாபிராம், மிட்டினமல்லி, முத்தாபுதுப்பேட்டை, திருநின்றவூர், பாக்கம் உள்ளிட்ட இடங்களில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் அரசின் சாதனைகள் அடங்கிய வகையில் புகைப்படங்களுடன் மின் விளக்குகள் வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

அத்துடன் பஸ் வழித்தட விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பஸ் ஸ்டாப்பில் அரசியல்கட்சி மற்றும் விளம்பர போஸ்டர்கள் ஒட்டி மறைத்துவிட்டதால் பஸ் விவரம் தெரியாமல் பயணிகள் திண்டாடுகின்றனர்.



இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், ‘’பல இடங்களில் நிழற்குடை அலங்கோலமாக காட்சி அளிக்கின்றன. அவைகள் மீது போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பதால் மின் விளக்குகள் வெளிச்சம் தெரிவதில்லை.

இரவில் நிழற்குடை முழுவதும் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இருட்டில் தான் பஸ்சுக்காக காத்து இருக்கின்றனர்.

இருளை பயன்படுத்தி சமூக விரோதிகள் பெண் பயணிகளிடம் சில்மிஷங்கள், வழிப்பறி செய்வது உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. பல பஸ் ஸ்டாப்புகளில் மேற்கூரைகள் சேதம் அடைந்து உள்ளது.

இருக்கைகள் உடைந்து கிடக்கின்றன.

இது குறித்து, சமூக ஆர்வலர்கள் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு பல முறை புகார் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் பயணிகள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர்’ என்றனர்.

இதுகுறித்து, நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், பஸ் ஸ்டாப் சேதமடைந்த  இருக்கைகள், மேற்கூரைகள், மின் விளக்குகளை ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

.

மூலக்கதை