சந்திரயான்-2 விண்கலம் ஜனவரி 3-ந் தேதி விண்ணில் ஏவப்படும் ‘இஸ்ரோ’ தலைவர் சிவன் தகவல்

PARIS TAMIL  PARIS TAMIL
சந்திரயான்2 விண்கலம் ஜனவரி 3ந் தேதி விண்ணில் ஏவப்படும் ‘இஸ்ரோ’ தலைவர் சிவன் தகவல்

பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை தொடர்ந்து, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் ‘இஸ்ரோ’ தலைவர் கே.சிவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பி.எஸ்.எல்.வி. ரகத்தில் இதுவரை 44 ராக்கெட்டுகள் ஏவப்பட்டு உள்ளன. இதில் 42 ராக்கெட்டுகள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு உள்ளன. இதன்மூலம் சர்வதேச சந்தையில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் நம்பத்தகுந்தது என்று கருதப்பட்டு உள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அடுத்த 6 மாதங்களில் 18 ஏவுதல்களை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக 2 வாரங்களுக்கு ஒரு ராக்கெட் வீதம் ஏவுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சந்திரயான்-2 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஜனவரி 3-ந் தேதி ஏவ முடிவு செய்துள்ளோம். ஜி-சாட் 29, ஜி-சாட் 11, ஜி-சாட் 20 என்ற 3 செயற்கைகோள்களையும் விரைவில் ஏவுவதற்கு திட்டமிட்டு உள்ளோம்.

தற்போது வணிக ரீதியில் ஏவப்பட்டு உள்ள பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் மூலம் ரூ.220 கோடி வருமானம் கிடைத்துள்ளது. வருகிற நவம்பர் மாதம் மத்தியில் ஏவப்படவுள்ள பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் 30 வெளிநாட்டு செயற்கைகோள்களும், நம் நாட்டை சேர்ந்த ஒரு செயற்கைகோளும் அனுப்பப்பட உள்ளது.

மங்கள்யான் விண்கலம் 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் விமான போக்குவரத்து அமைச்சகத்துடன் இஸ்ரோ இணைந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ஏவுதளத்துக்கான தேவை ஏற்படவில்லை. இதனால் 1 மற்றும் 2-வது ஏவுதளங்களில் கட்டுமானத்தை அதிகரித்து வருகிறோம்.

ஜி-சாட் 20 செயற்கைகோள் ‘டிஜிட்டல் இந்தியா’வை மையமாக வைத்து அடுத்த ஆண்டு ஏவப்பட உள்ளது. இதன்மூலம் அகில உலக அளவில் அதிவேக இணையதள சேவையை பெறமுடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை