சேலம், கோவை, கடலூர், பாளையங்கோட்டை சிறைகளில் போலீசார் அதிரடி சோதனை

PARIS TAMIL  PARIS TAMIL
சேலம், கோவை, கடலூர், பாளையங்கோட்டை சிறைகளில் போலீசார் அதிரடி சோதனை

சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளின் சொகுசு வாழ்க்கை பற்றிய புகைப்படங்கள் அண்மையில் வெளியானது. இந்த புகைப்படங்களின் மூலம் கைதிகள் சொகுசாக இருப்பது தெரியவந்தது.

கைதிகள் தாங்கள் அடைக்கப்பட்ட அறைகளை உல்லாச விடுதிகளாக மாற்றி இருப்பதை அந்த புகைப்படங்கள் வெளிச்சம் போட்டு காட்டின. கைதிகள் ‘டிப்-டாப்’ உடை அணிந்து சிறைச்சாலைக் குள் வலம்வந்த காட்சிகள் இடம்பெற்று இருந்தது.

கைதிகள் அடைக்கப்பட்டு இருந்த அறைகளின் ஜன்னல்களில் வண்ண திரைச்சீலைகள் தொங்க விடப்பட்டு இருந்தன. ஆடம்பர மெத்தையுடன் கூடிய கட்டில்கள் கைதிகள் தூங்குவதற்கு அறைகளில் போடப்பட்டு இருந்தன.

வண்ண தொலைக் காட்சி பெட்டிகளும் கைதிகளின் அறைகளில் வைக்கப்பட்டு இருந்தன. வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட சுவையான உணவு வகைகளும் கைதிகளுக்கு பரிமாறப்பட்டதற்கான புகைப்படங்களும் வெளியாயின.

இந்த புகைப்படங்களை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அசுதோஸ் சுக்லா தலைமையில் புழல் மத்திய சிறையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 18 வண்ண தொலைக்காட்சி பெட்டிகளும், 3 எப்.எம். ரேடியோக்களும் கைதிகளின் அறைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

120 ஆடம்பர நாற்காலிகள், 500 விதவிதமான ஆடைகள், 30 மெத்தை படுக்கைகள் மற்றும் வண்ண திரைச்சீலைகள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன. பிரியாணி செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 100 கிலோ பாசுமதி அரிசியையும் சோதனையின்போது கைப்பற்றினார்கள்.

இதைத்தொடர்ந்து, சொகுசு வாழ்க்கை நடத்திய 5 சிறைக்கைதிகள் புழல் மத்திய சிறையில் இருந்து தற்போது வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த ஆடம்பர வசதிகளை செய்து கொடுத்த சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

புழல் மத்திய சிறையை தொடர்ந்து நேற்று ஒரே நேரத்தில் சேலம், கோவை, கடலூர், பாளையங்கோட்டை ஆகிய 4 மத்திய சிறைகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 850-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்குள்ள கைதிகளிடம் சமீபகாலமாக கஞ்சா, செல்போன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் சிறைத்துறை அதிகாரிகள் அவ்வப்போது பறிமுதல் செய்து வருகின்றனர். சில நேரத்தில் வெளியில் இருந்து கஞ்சா பொட்டலங்களை சிலர் சிறை வளாகத்திற்குள் வீசிய சம்பவமும் நடந்தது.

சேலம் தெற்கு குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சசிக்குமார், செந்தில்குமார், 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட மொத்தம் 43 போலீசார் நேற்று காலை 6 மணிக்கு சேலம் மத்திய சிறைக்குள் திடீரென்று நுழைந்தனர். அவர்கள் 4 பிரிவுகளாக பிரிந்து சிறையில் கைதிகள் தங்கியிருந்த ஒவ்வொரு அறையிலும் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் கைதிகளின் குளியல் அறைகள், சமையல் அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையின் போது சிறையில் இருந்த வார்டர்கள், அதிகாரிகள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. மேலும், சிறை வாசலில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சோதனையில் சில கைதிகளிடம் இருந்து பீடி கட்டுகள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாகவும், வேறு எந்த பொருட்களும் சிக்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். இதுதவிர, சிறை வளாகத்தில் ஏதாவது செல்போன்கள், கஞ்சா பொட்டலங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை காலை 8 மணி வரை 2 மணி நேரம் நீடித்தது. இதனால் சிறை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

கோவை மத்திய சிறையில் கோவை மாநகர போலீஸ் உதவி கமிஷனர் சுந்தர்ராஜ் தலைமையில் 2 இன்ஸ்பெக் டர்கள் உள்பட 60 போலீசார் நேற்று காலை 6 மணி அளவில் அதிரடி சோதனை நடத்தினார்கள். மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் நடத்தப்பட்ட இந்த சோதனையின் போது 7 பீடிகட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. வேறு எதுவும் சிக்கவில்லை.

கடலூர் மத்திய சிறை

கடலூர் மத்திய சிறையில் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ஏழுமலை, 13 சப்-இன்ஸ்பெக்டர்கள் என்று மொத்தம் 128 போலீசார் சோதனை மேற்கொண்டனர். காலை 6 மணி முதல் 8 மணி வரை 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையின் போது பேட்டரி, சிம்கார்டு, பீடி, தீப்பெட்டி போன்ற பொருட்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் சிறை அதிகாரிகள் நேற்று காலையில் கைதிகளின் அறைகளில் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் கைதிகளிடமும் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட எந்த பொருட்களும் சிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை