முதல்வர் மனோகர் பரிக்கருக்கு உடல்நலக்குறைவு கோவா சட்டப்பேரவையை கலைக்க வாய்ப்பு?

தமிழ் முரசு  தமிழ் முரசு
முதல்வர் மனோகர் பரிக்கருக்கு உடல்நலக்குறைவு கோவா சட்டப்பேரவையை கலைக்க வாய்ப்பு?

பனாஜி: கோவாவில் முதல்வர் மனோகர் பரிக்கர் தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வருகிறது. மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றிபெற்றது.

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், 13 இடங்களை பெற்ற பாஜ, உதிரி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது. ராணுவ அமைச்சராக பணியாற்றி வந்த மனோகர் பரிக்கர், அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு கோவா முதல்வராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள மனோகர் பரிக்கர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். தற்போதுகூட கோவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் தொடர் சிகிச்சையில் இருப்பதால், அரசு நிர்வாகம் முடங்கியுள்ளதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. மேலும், மனோகர் பரிக்கர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

இந்நிலையில், கோவா அரசை கலைத்துவிட்டு, நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலையும் சந்திக்க பாஜ திட்டமிட்டுள்ளதாக காங்கிரசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கிரிஷ் சொடன்கார், ஆளுநர் மிருதுளா சின்காவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ‘‘கோவா சட்டப்பேரவையை கலைக்க மனோகர் பரிக்கர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. சட்டப்பேரவையின் காலம் முடியும் வரை ஆட்சியை கலைக்க கூடாது.

ஆட்சி அமைக்க காங்கிரசுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.

மனோகர் பரிக்கர் சிறப்பான நிர்வாகத்தை அளிப்பார் என்றும், ஆட்சியை கலைக்கும் எண்ணம் எதுவும் பாஜவுக்கு கிடையாது எனவும் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.  

.

மூலக்கதை