திருப்பதியில் இன்று 2வது நாள் பிரம்மோற்சவம் சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருப்பதியில் இன்று 2வது நாள் பிரம்மோற்சவம் சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 2ம் நாளான இன்று காலை சின்னசேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதிஉலா வந்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தலைமை அர்ச்சகர் வேணுகோபாலதீட்சிதர் தலைமையில் ஆகம ஆலோசகர் சுந்தரவதன பட்டாச்சாரியார் முன்னிலையில் வேதமந்திரங்கள் முழங்க தங்க கொடிமரத்தில் கருடன் உருவம் வரையப்பட்ட மஞ்சள் நிற கொடியேற்றப்பட்டது.

முன்னதாக கொடியுடன், தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாட வீதியில் வலம் வந்தனர். மாலை 6. 45 மணிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு தனது குடும்பத்தினருடன் பேடி ஆஞ்சநேய சுவாமி கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்து வந்து ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தார். இதையடுத்து பிரம்மோற்சவத்தின் முதல்நாளான நேற்றிரவு ஏழுதலைகளுடன் கூடிய பெரிய சேஷ வாகனத்தில் தேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி வீதிஉலா வந்தார்.

2ம்நாள் உற்சவம் இன்று காலை நடந்தது. 5 தலை நாகங்கள் கொண்ட சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி மாட வீதிகளில் பவனி வந்தார்.

அப்போது நான்கு மாடவீதியின் இருபுறமும் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தியுடன் தரிசனம் செய்தனர். சுவாமி வீதி உலாவின்போது பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் சுவாமி வேடங்களில் நடனமாடியபடி வந்தனர்.

இன்றிரவு பால், தண்ணீரை பிரித்தெடுக்கும் அன்னப்பறவையைப்போல், பக்தர்களின் தீய எண்ணங்களை அகற்றி நல்ல எண்ணங்களாக அருள்பாலிப்பதை விளக்கும் வகையில் அன்ன வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

.

மூலக்கதை