பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வு; ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: நாளை பிரதமர் தலைமையில் ஆலோசனை

தினகரன்  தினகரன்
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வு; ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: நாளை பிரதமர் தலைமையில் ஆலோசனை

சென்னை: வழக்கம் போல் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் வெகுவிரைவில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ எட்டிவிடும் என்று வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. நேற்று 1 லிட்டர் பெட்ரோல் ரூ.84.19 காசுகளாக இருந்த நிலையில் இன்று ரூ.84.39 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் நேற்று ரூ.77.25 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட 1 லிட்டர் டீசல் விலை தற்போது 24 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.77.49 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலையேற்றம் தங்களுக்கு மிகப்பெரிய சுமையாக மாறிவிட்டது என்று வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வானது இதே நிலையில் நீடித்தால் 1 லிட்டர் பெட்ரோல் விலை விரைவில் ரூ.100-யை எட்டும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த 2008-ம் ஆண்டு 1 லிட்டர் பெட்ரோல் விலை 23.94 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.10 ஆண்டுகளில் 238 சதவீதம் அளவிற்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனிடையே இந்திய வர்த்தக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.91 ரூபாயாக சரிந்துள்ளது. இந்த நிலையில் பொருளாதார வீழ்ச்சி குறித்து ஆராய 15-ம் தேதி மோடி தலைமையில் ஆய்வுக்குழு கூட்டம் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை