தி.மு.க. குடும்ப கட்சி தான் மு.க.ஸ்டாலின் விளக்கம்

PARIS TAMIL  PARIS TAMIL
தி.மு.க. குடும்ப கட்சி தான் மு.க.ஸ்டாலின் விளக்கம்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரத்தில் செப்டம்பர் 15-ந் தேதி நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவினை மாவட்ட செயலாளர் பொன்முடி சிறப்பான முறையிலே முனைப்போடு ஏற்பாடு செய்து வருகிறார். மாவட்டத்தில் உள்ள மற்ற நிர்வாகிகளும், அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகளும் ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகளும், செயல் வீரர்களும் அயராது பாடுபட்டு வருகின்றனர்.

தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமையில் நடைபெறவிருக்கிற முப்பெரும் விழாவில், பொருளாளர் துரைமுருகன், துணைப்பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். விருதுகள் வழங்கிச் சிறப்புரை ஆற்றும் வாய்ப்பு எனக்கு (மு.க.ஸ்டாலின்) வழங்கப்பட்டிருக்கிறது.

தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பை ஏற்றபிறகு, தொண்டர்கள் அனைவரையும் ஒருசேர சந்திக்கின்ற பேரார்வத்துடன் விழுப்புரம் நோக்கி விரைகிறேன். நீங்களும் அதே ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் வருவீர்கள் என்று வழியெல்லாம் விழிவைத்து எதிர்பார்க்கிறேன். அதுதானே கழகம் வளர்த்துள்ள இயக்க பாசம்; ரத்த பாசம்.

தலைவர் கருணாநிதி நமக்குள் உருவாக்கிக் கெட்டிப்படுத்தியிருக்கும் உறவின் மேன்மை. மூத்தோரும், இளையோரும் தொண்டர்கள் என்ற உயர்வால் இணைந்து பங்கேற்கும் முப்பெரும் விழாவில், தி.மு.க.வை காத்திட உழைத்தோருக்கு விருது வழங்கிச் சிறப்பிப்பது தலைவர் கருணாநிதி உருவாக்கித் தந்த வாஞ்சைமிகு வழக்கம். அதனைச் சிறப்புறத் தொடர வேண்டும் என்ற எண்ணத்துடன், இந்த விழாவிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

பெரியார் விருது மும்பை வி.தேவதாசனுக்கும், அண்ணா விருது பொன்.ராமகிருஷ்ணனுக்கும், கலைஞர் விருது குத்தாலம் பி.கல்யாணத்துக்கும், பாவேந்தர் விருது புலவர் இந்திரகுமாரிக்கும் வழங்கப்படுவதுடன், இந்த ஆண்டு முதல், நமது பொதுச்செயலாளர் க.அன்பழகன் பெயரில் அறிமுகம் செய்யப்படும் பேராசிரியர் விருது கவிக்கொண்டல் மா.செங்குட்டுவனுக்கும் வழங்கவிருப்பதில் உள்ளபடியே பூரிப்பும் பெருமையும் கொள்கிறேன்.

தி.மு.க.வை கட்டிக்காப்பதில் தலைவர் கருணாநிதிக்கு, நம் மூத்தவர்கள் எந்தெந்த வகையில் துணை நின்றார்கள், பல்வேறு முனைகளில் கட்சிப் பணிகளை எப்படி மேற்கொண்டார்கள் என்பதை இளம் தொண்டர்கள் தெரிந்துகொள்ளும்போது, இந்த இயக்கத்தின் தியாக வரலாற்றை அறிந்துகொள்வதுடன், இந்த இயக்கம் கட்டிக்காக்கப்பட வேண்டிய தேவையும் தெரியவரும். அதற்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்கான விழாவாகத்தான் முப்பெரும் விழா நடைபெறவிருக்கிறது.

தி.மு.க.வை சிலர் குடும்ப கட்சி என்று விமர்சனம் செய்யும்போது, அவர்களின் அறியாமையை எண்ணி மனதுக்குள் சிரித்துக்கொள்வேன். இது குடும்ப கட்சி தான். குடும்பம் குடும்பமாக லட்சோப லட்சம் குடும்பங்கள் கட்சி விழாவில் பங்கேற்கிற பெருமைமிகு தொண்டர்களை இந்த இயக்கத்தைத் தவிர வேறெந்த இயக்கத்தில் காண முடியும்?. தி.மு.க.வை நிறுவிய பேரறிஞர் அண்ணா அற்புதமான அந்த உணர்வை விதைத்தார். தி.மு.க.வை கட்டிக்காத்த தலைவர் கருணாநிதி அந்த உணர்வை, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்தார்.

மூன்று தலைமுறையாக நாங்கள் தி.மு.க. குடும்பம் என்று சொல்லிக்கொள்வோர் நெஞ்சில்தான் எத்தனை பெருமிதம். என் தாத்தா - பாட்டி, அம்மா - அப்பா, நானும் என் உடன்பிறந்தோரும் தி.மு.க.வினர்தான் என்று பெருமைப்படக்கூடிய தொண்டர்களைக் கொண்ட இயக்கம் இது. தமிழ்நாட்டில் வாழ்வோர் அனைவரையும் தன் குடும்பமாக நினைக்கின்ற இயக்கம். உலகில் வாழும் தமிழர்களை எல்லாம் உடன்பிறப்புகளாகக் கருதிப் போற்றுகிற இயக்கம். அத்தகைய சிறப்பு வாய்ந்த பேரியக்கத்தின் பெருவிழா, முப்பெரும் விழா.

தி.மு.க.வை காத்திடவும், தலைவர் கருணாநிதியின் புகழுக்கு மேலும் மேலும் பெருமை சேர்த்திடவும், குடும்பம் குடும்பமாக விழுப்புரத்தில் கூடிடுவோம். கொள்கை முழங்கிட குன்றின் மேலிட்ட விளக்கெனக் குவிந்திடுவோம். வெற்றிபுரி நோக்கி வீறுநடைபோட்டு விரைந்திடுவோம். உங்களில் ஒருவனாக, உங்களால் ஒருவனாக, உள்ளத்தில் அன்பு பொங்கிட அழைக்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மூலக்கதை