புதிய விவசாய கொள்கை அறிவிப்பு : தனியாருக்கு மத்திய அரசு அனுமதி....மாநில அரசுடன் இணைந்து கொள்முதல் செய்யலாம்

தினகரன்  தினகரன்
புதிய விவசாய கொள்கை அறிவிப்பு : தனியாருக்கு மத்திய அரசு அனுமதி....மாநில அரசுடன் இணைந்து கொள்முதல் செய்யலாம்

புதுடெல்லி: விவசாய உற்பத்தி பொருட்களை தனியார் நிறுவனங்களுடன் இணைந்து மாநில அரசு கொள்முதல் செய்யும் புதிய கொள்முதல் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் கீழ்  தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் ஏஜென்சிகள் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின்  விளைப்பொருட்களை குறிப்பிட்ட சந்தைகளில் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில்  கொள்முதல் செய்து கொள்ளலாம்.மத்திய அமச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில் பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. * குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின் கீழ் காரிப் மற்றும் ராபி காலத்தில் விளையும் 23 பயிர்களுக்கான விலையை அரசு நிர்ணயிக்கிறது. விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்க பிரதமரின் அன்னததத்தா ஆய் சன்ரக்‌ஷன் அபியன்((பிஎம்-ஆஷா) என்ற புதிய கொள்முதல் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் கீழ் மூன்று திட்டங்களில் ஏதாவது ஒரு திட்டத்தை தேர்வு செய்ய மாநிலங்கள் அனுமதிக்கப்படும். தற்போதுள்ள ஆதரவு விலை திட்டம் (பிஎஸ்எஸ்), புதிதாக உருவாக்கப்பட்டுள்ள விலை பற்றாக்குறை பணம் செலுத்தும் திட்டம் (பிடிபிஎஸ்), பொருட்களின் விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட குறையும்போது, தனியார் கொள்முதல் இருப்பு வைத்திருப்பு முன்னோடி திட்டம் (பிபிஎஸ்எஸ்). இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் ஏஜென்சிகள் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் விளைப்பொருட்களை குறிப்பிட்ட சந்தைகளில் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்து கொள்ளலாம். பிபிஎஸ்எஸ் வழிகாட்டு நெறிமுறைகளின் படி இதை மேற்கொள்ளலாம். இத்திட்டத்தை அமல்படுத்த ரூ.15,053 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  இதில் இந்தாண்டு ரூ.6,250 கோடி செலவழிக்கப்படும். கொள்முதல் நிறுவனங்களுக்கு ஏற்கனவே அளித்துள்ள உத்தரவாதத்துடன் கூடுதலாக ரூ.16,550 கோடி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மொத்தம் ரூ.45,550 கோடி அரசு உத்தரவாதம் அளிக்கும். மத்தியப் பிரதேசத்தில் எண்ணை வித்துக்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளை பாதுகாக்க பிடிபிஎஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. பிடிபிஎஸ் திட்டத்தின் படி குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும், மொத்த விற்பனை சந்தையில் மாத சராசரி விலைக்கும் உள்ள வித்தியாசத்தை விவசாயிகளுக்கு அரசு வழங்கும். இந்த விலை வித்தியாசத் தொகை முன்கூட்டியே பதிவு செய்த விவசாயிகள், குறிப்பிடப்பட்ட சந்தையில் வெளிப்படையான ஏல மறையில் விற்பனை செய்தால் மட்டுமே வழங்கப்படும். விதிமுறைகள் படியே பிடிபிஎஸ் திட்டத்தில் ஆதரவு விலையை அரசு அளிக்கும். தனியார் நிறுவனங்களுடன் எண்ணெய் வித்துக்களை கொள்முதல் செய்வது மாநிலங்களின் விருப்ப திட்டமாகும். இந்த முன்னணி திட்டத்தின்படி 8 மாவட்டங்களில் எண்ணெய் வித்துக்களை கொள்முதல் செய்து கொள்ளலாம். இதுகுறித்து வேளாண்துறை அமைச்சர் ராதா மாகன் சிங் கூறுகையில், ‘‘மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு லாபகரமான விலை இத்தித்திட்டத்தின் கீழ் கிடைக்கும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிசெய்ய பிஎஸ்எஸ், பிடிபிஎஸ் அல்லது பிபிஎஸ்எஸ் ஆகிய மூன்று திட்டங்களில் ஏதாவது ஒன்றை மாநிலங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். விவசாயிகளை காக்க இதுவரை எடுக்கப்படாத நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாய செலவை குறைக்கவும், அறுவடைக்கு பிந்தை நிர்வாகத்தை வலுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர சந்தை சீர்திருத்த நடவடிக்கைகள் பலவற்றையும் மத்திய அரசு எடுத்துள்ளது. 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் தொலைநோக்கு திட்டத்தை நனவாக்குவதற்காக இந்த அரசு உறுதியாக உள்ளது. ’’ என்றார். இதுதவிர மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட வேறு சில முடிவுகள்: நெல், கோதுமை, மற்றும் இதர தாணியங்கள், பருப்பு, பருத்தி, சணல் கொள்முதலுக்கு ஏற்கனவே அளிக்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடர்ந்து அளிக்கப்படும்.  நாடு முழுவதும் ரூ.12,134 கோடி மதிப்பீட்டில் 13,675 கி.மீ. தூர ரயில் பாதையை மின்மயமாக்கவும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு நேற்று ஒப்புதல் அளித்தது. பெட்ரோல் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் எத்தனால் விலையை 25 சதவீதம் உயர்த்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, எத்தனால் விலை ரூ.47.50ல் இருந்து ரூ.52 ஆக உயரும்.

மூலக்கதை