மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க நவாசுக்கு 3 நாட்கள் பரோல்

தினகரன்  தினகரன்
மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க நவாசுக்கு 3 நாட்கள் பரோல்

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப், தனது மனைவி குல்சூம் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக 12 மணி நேர பரோல் வழங்கப்பட்டுள்ளது.  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப், அவரது மகள் மரியம், மருமகன் முகமது சப்தார் ஆகியோர் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  நவாஸ் செரீப்பின் மனைவி குல்சூம்  நீண்ட நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து லண்டனில் இருந்து குல்சூம் உடல் லாகூருக்கு கொண்டு வரப்படவுள்ளது. குல்சூம் உயிரிழந்த தகவல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த செரீப், மரியம் உள்ளிட்டோருக்கு தெரியப்படுத்தப்பட்டது. குல்சூம் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக செரீப், மரியம், முகமது சப்தார் ஆகியோர் 5 நாள் பரோல் கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால் அவர்களுக்கு முதலில் 12 மணி நேரம் மட்டுமே பரோல் வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.  இதை நீட்டிக்க வேண்டும் என்று நவாஸ் செரீப்பின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதையேற்றுக் கொண்ட அரசு, அவர்களுக்கு 3 நாள் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதன்படி சனிக்கிழமை அவர்கள் மீண்டும் சிறையில் வந்து சரணடைய வேண்டும்.பரோலை தொடர்ந்து, ராவல்பிண்டியில் உள்ள நுர் கான் விமான நிலையில் இருந்து சிறப்பு விமானம் மூலம், நவாஸ் செரீப் உட்பட 3 பேரும்  அவர்களது அதிகாரப்பூர்வ இல்லமான லாகூரில் உள்ள ஜதி உம்ராவிற்கு அழைத்து வரப்பட்டனர். இன்று குல்சூம் இறுதி சடங்கு நடக்க உள்ளது.

மூலக்கதை