அமெரிக்காவில் புளோரன்ஸ் புயல் ஆபத்து: மூன்று மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் புளோரன்ஸ் புயல் ஆபத்து: மூன்று மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு

வில்மிங்டன்: அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தை நெருங்கிய புளோரன்ஸ் புயலால் 3 மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பசிபிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து சூறாவளி புயலாக மாறி அமெரிக்காவின் கரோலினா கடற்கரை நோக்கி நகர்ந்து வருகிறது.  அமெரிக்க நேரப்படி நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணி அளவில் வடக்கு கரோலினா நோக்கி 28 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்து கொண்டு இருந்தது. இதனால் கரோலினா கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள விர்ஜினியா, மேரிலேண்ட் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை கொட்டுகிறது. புயல் கரையை கடக்கும்போது 225 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் கனமழை கொட்டுகிறது. அதையடுத்து ஏற்பட்ட வெள்ளத்தால் தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. கடல் அலைகள் 9 அடி உயரத்திற்கு எழும்புகின்றன.இதையடுத்து, அமெரிக்காவில் வடக்கு கரோலினா மற்றும் தெற்கு கரோலினா, விர்ஜினியா, மேரிலேண்ட் பகுதிகளில் புளோரன்ஸ் புயலை முன்னிட்டு அவசர நிலையை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும் ஓகியோ, பென்சில்வேனியா ஆகிய பகுதிகளும் பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது. புயல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  எனவே புயல் தாக்கும் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலீசார், தீயணைப்பு வீரர்கள், பொதுப்பணி துறை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. புயலை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

மூலக்கதை