குல்சும் நவாஸ் உடல் பாக்.,கிற்கு வருகிறது

தினமலர்  தினமலர்
குல்சும் நவாஸ் உடல் பாக்.,கிற்கு வருகிறது

லாகூர் : பிரிட்டனில் மரணமடைந்த, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், நவாஸ் ஷெரீப் மனைவி, குல்சும் நவாசின் உடலை, பாகிஸ்தானுக்கு எடுத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர், நவாஸ் ஷெரீப். இவர், ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.இவரது மனைவி, குல்சும் நவாஸ், 68. தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர், லண்டனில் உள்ள மருத்துவமனையில், நேற்று முன்தினம் காலமானார். இந்நிலையில், மனைவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க, 'பரோல்' கேட்டு, நவாஸ் ஷெரீப் விண்ணப்பித்தார். இதை ஏற்ற நீதிமன்றம், அவருக்கு, 12 மணி நேர பரோல் கொடுத்து உத்தரவிட்டது.ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்ட, நவாஸ் ஷெரிப், அவரது மகள், மரியம் நவாஸ், அவரது கணவர் ஆகியோர், லாகூர் வந்தடைந்தனர்.நேற்று, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரும், நவாஸ் ஷெரீபின் சகோதரருமான, ஷெபஸ் ஷெரீப், குல்சும் நவாசின் உடலை, பாகிஸ்தானுக்கு எடுத்து வர, பிரிட்டனுக்கு புறப்பட்டார்.லாகூரில், குல்சும் நவாசின் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.இன்று, குல்சும் நவாசின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும், நாளை, உடல் அடக்கம் செய்யப்படும் என, நவாஸ் குடும்பத்தினர் தெரிவித்தனர்.நேற்று, 'பரோல்' காலத்தை ஐந்து நாட்களுக்கு நீட்டிக்கும்படி, நவாஸ் ஷெரீப், மரியம் நவாஸ் மற்றும் அவரது கணவர் ஆகியோர் தரப்பில், நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.இதை விசாரித்த நீதிமன்றம், மேலும் மூன்று நாட்களுக்கு, பரோலை நீட்டித்துள்ளது. 'குல்சும் நவாசின் இறுதிச் சடங்கில் தாமதம் ஏற்பட்டால், அதற்கேற்றபடி, பரோல் மேலும் நீட்டிக்கப்படும்' என, நீதிமன்றம் கூறியுள்ளது.

மூலக்கதை