இலங்கை அகதிகள் தாயகம் திரும்ப இந்திய அரசு உதவ வேண்டும்: இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை

தினகரன்  தினகரன்
இலங்கை அகதிகள் தாயகம் திரும்ப இந்திய அரசு உதவ வேண்டும்: இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை

டெல்லி: இலங்கை அகதிகள் மீண்டும் தாயகம் திரும்பும் நடைமுறையை இந்திய அரசு எளிமைப்படுத்தி தரவேண்டும் என்று இலங்கை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா வலியுறுத்தியிருக்கிறார். இரு நாடுகளின் உறவை வலுப்படுத்துவதற்காக இலங்கையை சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் இந்தியா வந்துள்ளனர். அவர்கள் டெல்லியில் குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்து பேச இருக்கின்றனர். இதுகுறித்து பேசிய இலங்கை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா இந்தியாவிற்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். இலங்கையில் இருந்து ஏராளமனோர் அகதிகளாக தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைப்பதற்கான முயற்சிகளை அந்நாட்டு அரசு எடுத்துவருகிறது. அவர்கள் தாயகம் திரும்ப இந்திய அரசு உதவ வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது இலங்கையில் தமிழர்கள் உரிமை நிலைநாட்டப்பட்டு வருவதாக கூறியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 1987-ம் ஆண்டு போடப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்தியா ஒத்துழைக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். போரில் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாகாண மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இலங்கை அரசுக்கு உதவ வேண்டும் என்றும் இந்திய அரசுக்கு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

மூலக்கதை