தத்து பிள்ளை அல்ல பெற்ற பிள்ளை : நடிகை ரேவதி

தினமலர்  தினமலர்
தத்து பிள்ளை அல்ல பெற்ற பிள்ளை : நடிகை ரேவதி

நடிகை ரேவதி, பாரதிராஜாவின் மண்வாசனை படத்தில் அறிமுகமாகி அதன்பிறகு தென்னிந்திய மொழிகளில் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது அம்மா, அண்ணி கேரக்டர்களில் நடித்து வருகிறார். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சுரேஷ் மேனனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் கருத்து மாறுபாடு கொண்டு விவாகரத்து செய்து கொண்டனர். இதனால் ரேவதி தனியாக வாழ்ந்து வருகிறார். பல படங்களையும் இயக்கியுள்ளார்.

சமீபகாலமாக ரேவதி 5 வயது குழந்தையுடன் வெளியில் வருகிறார். திடீரென ரேவதியுடன் ஒரு குழந்தையை பார்த்ததும் பல்வேறு யூகங்கள், வதந்திகள் பரவியது. குறிப்பாக அந்தக் குழந்தையை அவர் தத்தெடுத்து வளர்க்கிறார் என்ற வதந்தி பரவியது. இதற்கு ரேவதி முற்றுப்புள்ளி வைத்தார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

"இதுவரை என் வாழ்க்கையில், பல பிரச்சனைகளை சந்தித்து தாண்டி வந்திருக்கிறேன். அதேப்போல் தாய்மை ஒரு பெண்ணின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும், அதற்காக ஏங்கி இருக்கிறேன். அதனால் டெஸ்ட் டியூப் சிகிச்சை மூலம் குழந்தை பெற்று கொண்டேன். அந்த குழந்தை தான் மஹி. ஆனால் அவள் என் தத்து மகள் என பலர் வதந்திகளை பரப்பி வருகிறார்கள் . இது குறித்து அதிகமாக நான் பேச விரும்பவில்லை" என்கிறார் ரேவதி.

மூலக்கதை