தமிழ் கையெழுத்து இயக்கம் தொடங்கினார் ஆரி

தினமலர்  தினமலர்
தமிழ் கையெழுத்து இயக்கம் தொடங்கினார் ஆரி

ரெட்டைச்சுழி, நெடுஞ்சாலை, மாயா படங்களில் நடித்தவர் ஆரி. இவர், மாறுவோம் மாற்றுவோம் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி பல்வேறு சமூக பணிகளை ஆற்றி வருகிறார். தற்போது தனது தொண்டு நிறுவனத்தின் சார்பில் தமிழர்கள் அனைவரும் தமிழிலேயே கையெழுத்திட வேண்டும் என்ற இயக்கத்தை தொடங்கி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

இந்த ஆண்டு ஜீன் மாதம் 30ம் நாள் வட அமெரிக்காவில் உள்ள டேலஸ் மாகாணத்தில், வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின், மெட்ரோபிலக்ஸ் தமிழ்ச்சங்கம் இணைந்து 31வது தமிழர் திருவிழாவில், உலகிற்கே தலைமொழியான தமிழில் கையெழுத்திடுவது எனும் முழக்கத்தை துவங்கி, 1119 பேர் ஒன்றிணைந்து தமிழில் கையெழுத்திட்டு புதிய கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. இதை வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையுடன் இணைந்து மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை முன்னெடுத்ததில் பெருமை கொள்கிறது.

தற்போது இந்த கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாட்டில் தொடங்கி உள்ளோம். இதற்காக மாவட்டந்தோறும் ஒரு பொறுப்பாளர் நியமித்து அவர்களுக்கு உதவியாக இரண்டு நபர்களும் பணியாற்ற உள்ளனர் அவர்கள் 8ம் வகுப்பு முதல் படிக்கும் மாணவர்களுக்கு தாய்மொழியில் கையொப்பமிடும் வழிமுறைகளையும் மற்றும் பிறமொழியை தாய்மொழியாக கொண்டவராக இருந்தாலும் அவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள் என்றார்.

அடுத்த நகர்வாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் துவங்கி தமிழகம் முழுவதும் பிரசார பேரணி மூலம் செம்மொழியான தமிழின் பெருமையை உரக்க சொல்லி, 2019 ஜனவரி 15ம் நாள் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு குமரிமுனையில் உள்ள திருவள்ளுவர் சிலையின் முன்பு நிறைவடையும். தாய் மொழியில் கையொப்பமிடுவது அவமானமல்ல, அது நம் அடையாளம் .என்றார் ஆரி.

மூலக்கதை