மகாராஷ்டிரா ‘காஸ்மோஸ்’ வங்கியில் ரூ.94 கோடி ‘லபக்’ 2 பேர் கைது: 28 நாடுகளை சேர்ந்த கும்பல் 3 நாளில் கைவரிசை

தமிழ் முரசு  தமிழ் முரசு
மகாராஷ்டிரா ‘காஸ்மோஸ்’ வங்கியில் ரூ.94 கோடி ‘லபக்’ 2 பேர் கைது: 28 நாடுகளை சேர்ந்த கும்பல் 3 நாளில் கைவரிசை

புனே: புனே ‘காஸ்மோஸ்’ வங்கியின் கணக்கில் இருந்து, ரூ. 94 கோடி ரூபாய் கொள்ளையடித்த ‘ஹேக்கர்ஸ்’ இருவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கும்பல், 28 நாடுகளில் இருந்து மேற்கண்ட ரொக்கத்தை கொள்ளையடித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், புனேவை தலைமையகமாக கொண்டு செயல்படும் ‘காஸ்மோஸ்’ கூட்டுறவு வங்கியின் தலைமை கிளையில், கடந்த ஆகஸ்ட் 11, 12, 13ம் தேதிகளில் சர்வர் இரண்டு முறை ‘ஹேக்கிங்’ செய்யப்பட்டு ரூ.

94 கோடி ரொக்கம், இந்தியா மற்றும் இந்தியாவிற்கு வெளியே உள்ள வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஹாங்காங்கை தலைமையமாக கொண்டு செயல்படும் நிறுவனத்திற்கு எதிராகவும், அடையாளம் தெரியாத ஹேக்கர்களுக்கு எதிராகவும் வங்கி நிர்வாகத்தினர் புனே குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

இதில், டெபிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்பட்ட 14,849 பரிவர்த்தனைகளில் ரூ. 80. 5 கோடி வெளிநாட்டு வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளது.

‘ஸ்விப்ட்’ பரிவர்த்தனை முறையில் ரூ. 13. 92 கோடி மாற்றப்பட்டுள்ளது.

திருடப்பட்ட தொகையில் ரூ. 78 கோடி ஹாங்காங்கிற்கு மாற்றப்பட்டுள்ளது, இந்தியாவில் மட்டும், ரூ.

2. 5 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் சுவிட்ச் சர்வரில் ‘மால்வேர்’ (தீங்கான) தாக்குதலை மேற்கொண்டு வெளிநாட்டிற்கு பணம் திருடப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.



இதுதொடர்பாக, சைபர் க்ரைம் தடுப்பு துணை கமிஷனர் ஜோதிப்ரியா சிங் தலைமையிலான போலீசார், எஸ்ஐடி உள்ளிட்ட சிறப்பு புலனாய்வு குழுக்களின் உதவியுடன், நேற்று மும்பையில் இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்படி, கைதான இருவரையும் 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் கூறியதாவது: அமெரிக்க நாட்டின் சைபர் பாதுகாப்பு குறித்து பிளாக்கை நடத்தி வரும் பத்திரிகையாளர் பிரைன் கெர்ப்ஸ், அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐக்கு, கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு ரகசிய தகவல் அனுப்பி இருந்தார். அதில், அடுத்த சில நாட்களில் உலகளவில் பாதுகாப்பு குறைபாடு கொண்ட சில வங்கிகளின் வாடிக்கையாளர்களின் கணக்குகள் ஹேக்கிங் செய்யப்பட்டு, அதில் இருந்து பணம் கொள்ளை போக வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி, வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்து விசா, ரூபே கார்டுகள் மூலம் பணம் கொள்ளை போனது. கனடா, ஹாங்காங், இந்தியா ஆகிய நாடுகளின் வங்கிகளின் கணக்கில், பல கோடி ரூபாயை ஹேக்கர்ஸ் திருடியுள்ளனர்.

இந்தியாவில், ‘காஸ்மோஸ்’ வங்கியில் கைது செய்யப்பட்ட இருவரும், ரூ. 2. 5 கோடி கொள்ளையடித்துள்ளனர்.

மொத்தமாக, 28 நாடுகளில் உள்ள ஏடிஎம்கள் மூலம், ரூ. 94 கோடி ரூபாய் கொள்ளை போனது. இவ்வழக்கில், மேலும் சிலர் கைதாக வாய்ப்புள்ளது.



.

மூலக்கதை