4 அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தம்: தமிழகம் முழுவதும் கட்டாய மின்வெட்டு அமல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
4 அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தம்: தமிழகம் முழுவதும் கட்டாய மின்வெட்டு அமல்

* தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பாதிப்பால் அவதி
* மேற்குவங்கம், ஒடிசா மழையால் நிலக்கரி பற்றாக்குறை

சென்னை: மின் உற்பத்தி செய்வதற்கான நிலக்கரி பற்றாக்குறையால், தமிழகத்தில் 4 அனல் மின்நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதனால், மாநிலம் முழுவதும் கட்டாய மின்வெட்டு அமலாகி உள்ளது.

இப்பிரச்னையால், தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பாதிப்பு மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில், மின் உற்பத்தி செய்ய தேவையான நிலக்கரி போதுமான அளவு இல்லை.

இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடமாவட்டங்களில் கட்டாயமாக 2 மணி நேர மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. மின் வாரியத்தின், ஐந்து அனல் மின் நிலையங்களில் பயன்படுத்த, தினமும், 75 ஆயிரம் டன் நிலக்கரி தேவை.

ஒடிசா, மேற்கு வங்கம் மாநிலங்களில், மத்திய அரசுக்கு நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. அங்கிருந்து, தமிழகத்திற்கு தினமும், ஒரு சரக்கு ரயிலில், 4,000 டன் என, 16 ரயில்களில், 64 ஆயிரம் டன் நிலக்கரி அனுப்ப வேண்டும்.

ஆனால், 40 ஆயிரம் டன் கூட வருவதில்லை. சுரங்கங்களில் இருந்து எடுத்து வரப்படும் நிலக்கரி, ஒடிசாவில் உள்ள பரதீப், மேற்கு வங்கம்  ஹால்டியா, ஆந்திரா  விசாகப்பட்டினம் துறைமுகங்கள் வழியாக, தமிழகம் வருகிறது.
மேற்கண்ட துறைமுகங்களுக்கு, தமிழக அரசின் பூம்புகார் நிறுவனம், அதிக கப்பல்களை அனுப்பாதது; கப்பல்கள் செல்வதற்கு, துறைமுக நிர்வாகங்கள், தாமதமாக அனுமதி தருவது உள்ளிட்ட காரணங்களால், அடிக்கடி நிலக்கரி வரத்து தாமதமாகிறது.

மேலும், தற்ேபாது மேற்குவங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களில் கடுமையான மழை, வெள்ளத்தால், சுரங்கங்ளில் இருந்து நிலக்கரி வெட்டி எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், தமிழகத்திற்கான நிலக்கரி சப்ளை முற்றிலும் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன், 20 நாட்களுக்கு தேவையான நிலக்கரியை இருப்பு வைக்க, மின் வாரியம் உத்தரவிட்ட நிலையில், தற்போது அதுவும் தீர்ந்துவிட்டதால், நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யும் அனல்மின் நிலையங்களை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

என்எல்சி உள்ளிட்ட மத்திய மின் நிலையங்களிலும், பழுது மற்றும் பராமரிப்பு காரணமாக, அடிக்கடி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், மின் தேவையை பூர்த்தி செய்வதில், தமிழ்நாடு மின் வாரியம் ெபரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக, சென்னை தவிர்த்த மற்ற மாவட்ட பகுதிகளில், சில மணி நேரங்கள் மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

தமிழகத்திற்கு ஒதுக்கியுள்ள நிலக்கரி மற்றும் மின்சாரத்தை முழுவதுமாக வழங்கும்படி, மத்திய அரசிடம், பல முறை வலியுறுத்தியும் தீர்வு கிடைக்காததால் நிலக்கரி பற்றாக்குறை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கிடையே கடந்த மே மாதம் முதல் காற்றாலை சீசன் துவங்கியதால், அனல் மின் நிலையங்களில் தினசரி மின் உற்பத்தி, பாதியாக குறைக்கப்பட்டது.

காற்றாலை மூலம் தினசரி 3,000 மெகாவாட் மின்சாரம் கிடைத்ததால் கோடையில் மின்வெட்டு ஏற்படவில்லை. காற்றாலை உற்பத்தியும் தற்போது குறைந்து வருவதால், திடீர் பற்றாக்குறை ஏற்பட்டு மின் தேவை அதிகரித்துள்ளது.

தற்போது அனல் மின் நிலையங்களில் தினசரி உற்பத்தி தடைப்பட்டதால், வடசென்னை பகுதியில் இயங்கும் 3 அனல்மின் நிலையங்கள் கடந்த செவ்வாய் கிழமையும், மேட்டூரில் ஒரு அனல்மின்நிலையத்தில் கடந்த சனிக்கிழமையும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டன. மேற்கண்ட 4 அனல் மின்நிலையங்களில் மின் உற்பத்தி தடைப்பட்டதால், அதில் இருந்து நாள்தோறும் பெறப்படும் 2,010 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.



அதனால், மின் பற்றாக்குறையை ஈடுகட்ட டெல்டா மற்றும் சில மாவட்டங்களில், அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பல மணி நேரம் மின்சாரம் இல்லாததால் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

வரும் நாட்களில் நிலக்கரி பற்றாக்குறை பூர்த்தி செய்யப்பட்டாலும், அனல் மின் நிலையங்கள் மீண்டும் முழு அளவு செயல்பட கால அவகாசம் தேவை என்பதால் தமிழகத்தில் மேலும் சில நாட்களுக்கு மின்வெட்டு பிரச்னை தொடரும் எனத் தெரிகிறது. இதுகுறித்து, மின்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்திற்கு, ஆண்டுக்கு 26 மில்லியன் டன் நிலக்கரியை மேற்குவங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து பெறப்படுகிறது.

இருந்தும், மேற்கண்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழை, வெள்ளத்தால் நிலக்கரி வரத்து மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான மின் தேவை 14,200 மெகாவாட்டாக இருந்தும், தற்போது சில அனல்மின் நிலையங்களில் இருந்து மின் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், மின்வெட்டு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

அனல் மின் நிலையங்களில் முழு அளவில் உற்பத்தி தொடங்க மேலும் சில நாட்கள் ஆகும் என்பதால் அதுவரை மின் பிரச்சினை நீடிக்கும். மின்வெட்டு பிரச்னையை தீர்க்க, வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மார்க்கெட்டிலும் வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று வரை சென்னை தவிர்த்து மற்ற மாநிலங்களில் மின்ெவட்டு இருந்த நிலையில், இன்று காலை முதல் சென்னையிலும் சிலமணி நேரங்கள் மின்ெவட்டு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

2,010 மெகாவாட் பற்றாக்குறை
மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின்நிலையத்தின் முதல் நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட், இரண்டாவது நிலையில் உள்ள 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் என மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முதல் நிலையின் 3வது அலகில் 210 மெகாவாட்டும், 2வது நிலையில் உள்ள 2 அலகுகளிலும் 1,200 மெகாவாட் என மொத்தம் 3 அலகுகளிலும், நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டதால், 1,410 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகள் உள்ளன. இவற்றின் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

2வது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த 2 பிரிவுகள் மூலம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தற்போது நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டதால், மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 2வது பிரிவில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. ெமாத்தமாக, ேமற்கண்ட 4 அனல்மின் நிலையங்களிலும், 2,010 மெகாவாட் மின் உற்பத்தி கிடைக்கப் ெபறாத நிலை ஏற்பட்டுள்ளது.

காற்றாலையும் கை கொடுக்கல!
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி, மற்றும் காற்றாலைகள் அதிகம் உள்ள ஈரோடு மண்டல பகுதிகளில் உள்ள சுமார் 10 ஆயிரம் காற்றாலைகள் மூலம் நாள்தோறும் அதிக மின் உற்பத்தி நடந்தது.

தொடர்ந்து சராசரியாக 3 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு காற்றாலை மின் உற்பத்தி கைகொடுத்தது. இந்நிலையில் காற்றின் வேகம் கடந்த 15 நாட்களாக படிப்படியாக குறைந்து வந்தது.

இதனால் காற்றாலை மின் உற்பத்தி சரிவடைந்தது. கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் மொத்த காற்றாலை மின்உற்பத்தி 500 மெகாவாட்டிற்கும் கீழே குறைந்தது.

நேற்றைய தமிழகத்தின் மொத்த காற்றாலை சராசரி மின்உற்பத்தி 431 மெகாவாட்டாக இருந்தது. இதனால் மொத்த மின் பற்றாக்குறை 6 ஆயிரத்து 539 மெகாவாட்டாக உயர்ந்தது.

நெல்லை உள்ளிட்ட மாவட்டத்தின் பலபகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் மட்டும் ெதாடர்ந்து 21 முறை மின்வெட்டு ஏற்பட்டது. ஒரே நாளில் தொடர்ந்து மின்சாரம் வந்து, சென்று கொண்டிருந்ததால் பொதுமக்கள் எரிச்சல் அடைந்தனர்.

தற்போது காலாண்டு தேர்வு நடந்து வரும் நிலையில், மின்வெட்டால் மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.



.

மூலக்கதை