தங்க டிபன் பாக்சில் சாப்பிட்ட திருடர்கள்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
தங்க டிபன் பாக்சில் சாப்பிட்ட திருடர்கள்!

தங்கத் தட்டில் சாப்பிட்டு, தங்க டம்ளரில் நீர் அருந்த யாருக்குத் தான் ஆசை இருக்காது? தங்க டிபன் பாக்சில் அள்ளி அள்ளிச் சாப்பிட்டு ஆசை தீர்த்த திருடர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஹைதராபாத் பாத்தபஸ்தி எனும் பகுதியில் நிஜாம் அருங்காட்சியகம் உள் ளது.  மன்னர்கள் பயன்படுத்திய தங்க சிம்மாசனம், வைர, வைடூரிய ஆபரணங்கள், தங்கம், வைரங்களால் வடிவமைக்கப்பட்ட டிபன் பாக்ஸ், நவரத்தின கற்களால் உருவாக்கப்பட்ட குவளைகள், தந்தங்களால் ஆன பல ஆயுதங்கள் போன்ற விலையுயர்ந்த பல்வேறு பொருட்கள், பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகத்திற்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அதனைச் சுற்றிலும் சுமார் 15 மீட்டர் உயர சுற்றுச்சுவர் உள்ளது. மேலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காலையில் 3 பேர், இரவில் 5 பேர் என  காவலர்கள்  பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த அருங்காட்சியகத்தில் இருந்து சில தினங்களுக்கு முன், தங்க டிபன் பாக்ஸ், நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட குவளை மற்றும் கிண்ணம், மிக அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தங்க ஸ்பூன் போன்ற பொருட்கள் மாயமானது.

அருங்காட்சியகத்தின் மாடியில் உள்ள கண்ணாடி ஜன்னலை உடைத்து, பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தங்க டிபன் பாக்ஸ் போன்றவற்றை திருடிச் சென்ற 2 பேரை போலீஸார் கைது செய்து அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர். அது பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்:

ராஜேந்திர நகர் பகுதியைச் சேர்ந்த முகமது கவுஸ் பாஷா (வயது 23), முகமது முபின் (வயது 24) இருவரும் நண்பர்கள். வெல்டிங் தொழில் செய்து வந்த இவர்கள் இருவரும் அருங்காட்சியகத்துக்கு முன்கூட்டியே வந்து சென்றுள்ளனர்.

அருக்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடி கேமராவில் காட்சிகள் பதிவாகாமல் தந்திரமாக தங்க டிபன் பாக்ஸ், நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட குவளை மற்றும் கிண்ணம், மிக அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தங்க ஸ்பூன் ஆகியவற்றை எடுத்துச் சென்றுள்ளளனர். 

அருங்காட்சியகத்தில் திருடிய விலை உயர்ந்த பொருட்களை எடுத்துக் கொண்டு மும்பை சென்றுள்ளனர். அங்கு வசதியான ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர். தங்க டிபன் பாக்ஸ் மிக விலை உயர்ந்தது என்பதால் வாங்குவதற்கு ஏற்ற நபர்கள் கிடைக்கவில்லை.

தங்க டிபன் பாக்ஸில் உணவு வைத்து சாப்பிட்டு தங்கள் ஆசையை நிறைவு செய்துள்ளனர். நிஜாம் கூட தினந்தோறும் தங்க டிபன் பாக்ஸில் சாப்பிட்டிருக்க மாட்டார். ஆனால் இவர்கள் தினந்தோறும் தங்க டிபன் பாக்ஸில் உணவு சாப்பிட்டுள்ளனர்.

எவ்வளவு முயன்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான டிபன் பாக்ஸை விற்பனை செய்ய முடியாததால் மீண்டும் ஹைதராபாத்திற்கே திரும்பிய போது போலீசார் பிடியில் சிக்கிக் கொண்டனர்.

இவை அனைத்தும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மூலக்கதை