ஆப்கனில் நடந்த முத்தரப்பு கூட்டம்

தினமலர்  தினமலர்

காபூல்: ஆப்கானிஸ்தானில், இந்தியா - ஈரான் - ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற முத்தரப்பு கூட்டம், முதன்முறையாக நேற்று நடந்தது.தெற்கு ஆசிய நாடான, ஆப்கானிஸ்தானின் தலைநகர், காபூலில், இந்தியா - ஈரான் - ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த, வெளியுறவுத் துறை செயலர்கள் பங்கேற்ற முத்தரப்பு கூட்டம் நேற்று நடந்தது.இதில், இந்தியா சார்பில், வெளியுறவுத் துறை செயலர், விஜய் கோக்லே தலைமையிலான அதிகாரிகள் பங்கேற்றனர்.இது தொடர்பாக, மூன்று நாடுகள் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்த கூட்டத்தில், இந்தியா - ஈரான் - ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்துவது குறித்து, ஆலோசிக்கப்பட்டது. மேலும், ஈரானில் உள்ள, சாபஹார் துறைமுகத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.பொருளாதார ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பது, பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்க ஒத்துழைப்பு அளிப்பது என, கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் தலைமையிலான, அமைதி மற்றும் நல்லிணக்க செயல்பாடுகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அடுத்த முத்தரப்பு கூட்டம், இந்தியாவில், 2019ல் நடக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மூலக்கதை