செக்கிழுத்த செம்மல் திரு.வ.உ.சி. அவர்களின் 146-வது பிறந்த நாள் விழா டெலவரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
செக்கிழுத்த செம்மல் திரு.வ.உ.சி. அவர்களின் 146வது பிறந்த நாள் விழா டெலவரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது

கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல் திரு. வ. உ. சிதம்பரனார் அவர்களின் 146வது பிறந்த நாள் விழா செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி சனிக்கிழமை அன்று அமெரிக்காவின் முதல் மாநிலமாம் டெலவரில் முதன் முறையாக இனிதே கொண்டாடப்பட்டது. இது போன்ற விழாக்கள் தமிழ்ப் பெருந்தகைகளைப் பற்றிய செய்திகளை இளம் தலைமுறையினருக்கு கடத்துவதற்கான நோக்கத்தில் நடத்தப்படுவனவாகும். இந்த நோக்கத்தில் முதன் முதலாக கடந்த ஏப்ரல் மாதம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தற்போது வ.உ.சி. அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

வ. உ.சி அவர்களின் பிறந்த நாள் விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது. பிறகு குழந்தைகளுக்கான வ. உ.சி அவர்களின் வரலாறு குறித்த வினாடி வினா போட்டி, வ.உ.சி அவர்களின் மார்பளவு உருவப்படத்தை வரையும் போட்டி மற்றும் பெரியவர்களுக்கான பேச்சுப் போட்டி ஆகியவை சிறப்பாக நடைபெற்றன. ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திரு. ந.க.இராஜ்குமார் வினாடிவினாப் போட்டியை சிறப்பாக வடிவமைத்து திறமையாக நடத்தினார். இப்போட்டிகளில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வமாகக் கலந்து கொண்டனர்

பேச்சுப் போட்டியில் பங்கேற்ற திரு. செல்வக்குமார் வேலு, திருமதி.ரமா ஆறுமுகம் மற்றும் திருமதி. பாரதி கண்ணன் ஆகியோர் "வ.உ.சி யை நாம் ஏன் போற்ற வேண்டும்" என்ற தலைப்பில் வ. உ.சி குறித்த சிறப்பான தகவலகளைப் பகிர்ந்து கொண்டனர்.

விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் திரு.தங்கம் வையாபுரி அவர்கள் வரவேற்று பேசினார். உலகத் தமிழ்க்கழக மயிலாடுதுறை கிளைத்தலைவர் திரு.கோ.அரங்கநாதன் அவர்கள் தொடக்க உரை ஆற்றினார்.

இவ்வினிய விழாவில் பாரதியார் பாடலான "சிந்து நதியின் மிசை நிலவினிலே" என்கிற பாடலை ஒய்வுபெற்ற தமிழாசிரியை திருமதி.வசந்த கோகிலா அவர்கள் கணீர்க் குரலில் பாடி மகிழ்வித்தார். பிறகு நண்பர்கள் திரு.ந.க.ராஜ்குமாரும், திரு.சல்மான் அவர்களும் உரையாற்றினார்கள்.

இந்த மகத்தான விழாவின் விருத்தினராக சமூக ஆர்வலரும், கவிஞருமான  திரு.மகேந்திரன் பெரியசாமி வாசிங்டன் பகுதியிலிருந்து கலந்துகொண்டு வ.உ.சி யின் வரலாற்றை மிகத்தெளிவாக எடுத்துரைத்து அரங்கில் இருந்த அனைவரையும் கவர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து தூத்துக்குடியில் வசிக்கும் வ.உ.சி யின் உறவினர் திரு.முருகேசன் முத்துகிருஷ்ணன் அவர்கள் பேசி அனுப்பிய, வ.உ.சி பற்றிய அரிய செய்திகளைக் கொண்ட காணொளி பகிரப்பட்டது.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அனைவர் முன்னிலையிலும் ரொக்கப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திரு.பிரசாத் பாண்டியன் அவர்கள் தன் சொல்லாற்றலால் அரங்கைக் கட்டுக்குள் வைத்திருந்து இடையிடையே வ.உ.சி குறித்த பல அரிய தகவல்களைக் கூறி நிகழ்ச்சியைச் சுவைபட சிறப்பாகத் தொகுத்தளித்தார்.

இறுதியாக விழாவின் மற்றுமொரு ஒருங்கிணைப்பாளர் திரு.துரைக்கண்ணன் அவர்கள் நன்றியுரை கூற வரலாற்று நாயகன் வ.உ.சி.-க்கு எடுக்கப்பட்ட சிறப்புமிக்க இவ்விழா இனிதே நிறைவுற்றது. விழாவில் பங்கேற்றவர்கள் போற்றுதலுக்குரிய மாமனிதர் திரு.வ.உ.சி குறித்த பல செய்திகளை உள்வாங்கிக் கொண்ட நிறைவோடு விடைபெற்றனர்.

இந்த விழாவை டெலாவர் பகுதியைச் சார்ந்த திரு. துரைக்கண்ணன் சுந்தரக்கண்ணன், திரு பிரசாத் பாண்டியன் மற்றும் திரு. ந.க. ராஜ்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.  

 

- ரமா ஆறுமுகம்

மூலக்கதை